மத் 9:28 அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/SNOq_dfCoZo
இதேபோன்ற ஒரு சம்பவத்தை லூக் 18:41 மற்றும் மாற் 10:51ல் காண்கிறோம். அங்கு அந்த குருடன் இயேசுவிடம் தனக்கு இரக்கம் காட்டும்படி கேட்டான். ஆனால் இயேசு அங்கிருந்த குருடனிடம், நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாய்? என்று கேட்டார். இயேசு அவனை திட்டவட்டமாகவும் குறிப்பாகவும் சொல்ல விரும்பினார். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாய்? அது மிகவும் முக்கியமானது. அந்த குருடன் பொதுவான ஜெபத்தை ஏறெடுக்கிறான். என் மீது இரக்கமாயிரும்.பின்னர் ஒரு குறிப்பிட்ட ஜெபம், ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
என் மீது இரக்கமாயிரும் என்பது ஒரு பொதுவான ஜெபம். ஆண்டவரே, நான் குருடன். ஆண்டவரே, நான் இணைய ஆபாசத்திற்கு அடிமை. ஆண்டவரே, நான் பொய்க்கு அடிமை. ஆண்டவரே, நான் பொறாமைக்கும் கசப்புக்கும் அடிமை என்று நாம் குறிப்பாக கூறலாம். ஆண்டவரே, நான் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட விரும்புகிறேன் என்று பொதுவான ஜெபத்தை அநேக வேளைகளில் ஏறெடுக்கிறோம். ஆனால் கர்த்தர் நம்மிடம் கேட்கிறார், நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?. எந்த பாவத்திற்கு நீ குருடனாயிருக்கிறாய்? அதை நீ குறிப்பிட்டு என்னிடத்தில் சொல் என்றே விரும்புகிறார். ஆண்டவரே, என்னை ஆசீர்வதியும் என்று ஜெபிக்கிறோம் . ஆண்டவர் கேட்கிறார், நான் எந்த காரியத்தில் உன்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்பதாக. பொதுவான ஜெபங்கள் உண்மையில் நம்மை எங்கும் அழைத்துச் செல்வதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
நாம் நமது குறிப்பிட்ட வேண்டுகோளை ஆண்டவரிடம் தெரிவித்த பிறகும், நமது ஜெபங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. காரணம் இன்னும் ஒரு படி நாம் செல்லவேண்டும், அது நம்முடைய விசுவாசம். இயேசு எப்போதும் விசுவாசத்தைத் தேடுகிறார். விசுவாசத்தைக் காணும்போது இயேசு ஆச்சரியப்படுகிறார், மகிச்சியடைகிறார். அவிசுவாசத்தை காணும்போது அவர் வருத்தப்படுகிறார், மாத்திரமல்ல, திட்டவும் செய்வார். இயேசு உங்களை விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே என்று சொல்லவேண்டுமா? இல்லை இஸ்ரவேலில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் காணவில்லை என்று மெச்சிக்கொள்ள வேண்டுமா ? விசுவாசத்தைக் காணும்போதெல்லாம் அவர் எப்போதும் சந்தோசப்படுகிறார். உங்கள் விசுவாசம் உங்களை இரட்சிக்கும். உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் குணமடைந்தீர்கள் என்று கூறி எல்லாரையும் அவர் ஊக்குவிக்கிறார்.
இந்தக் குருடர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குருடர்களின் கண்களை யாராவது திறந்ததாக கேள்விப்பட்டதே இல்லை. இஸ்ரவேலில் உள்ள அனைவரும் சாத்தியமற்றது என்று கருதிய ஒன்றை அவர்கள் நம்ப முயன்றனர், ஆகையால் அவர்கள், ஆம், ஆண்டவரே. உம்மிடம் வல்லமை இருப்பதாக நாங்கள் விசுவாசிக்கிறோம். இந்தப் பரிசேயர்களை நாங்கள் நம்ப மாட்டோம், மற்ற மனிதர்களை நாங்கள் நம்பமாட்டோம், ஆனால் நாங்கள் உம்மை நம்புகிறோம் என்றார்கள். அவர்கள் விரும்பியதைப் பெற்றார்கள். இயேசு, உன் விசுவாசத்தின்படி உனக்கு ஆகட்டும் என்றார். அவர்கள் பார்வையை பெற்றுக்கொண்டார்கள். அதுபோலத்தான், நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியதை பொதுவாக அல்ல; குறிப்பாக கேளுங்கள். பின்பு அதை பெற்றுகொள்ளுவீர்கள் என்று விசுவாசத்துடன் இருங்கள். அப்பொழுது, உங்கள் விசுவாசத்தின் அளவை பொறுத்து நீங்கள் அற்புதத்தை பெற்றுகொள்ளுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org