கர்த்தர் செய்யும் காரியங்கள் பயங்கரமாயிருக்கும் (The things the Lord does are awesome)

யாத்திரகமம் 34 : 10  அதற்கு கர்த்தர் : இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NE1ZFhvSm5c

எகிப்துலிருந்து கானானுக்கு நேராக மோசேயின் மூலமாய் நடத்தப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்தார்கள். ஒருமுறை கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்கு நீ இஸ்ரவேல் ஜனங்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும், கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார். அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில், அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும், ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்று சொல்லி, பின்னர் மலையின்மேல் ஏறி, மேகத்தின் நடுவிலே பிரவேசித்து,  இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான். கர்த்தர் மோசேயோடு பேசிக்கொண்டிருந்தார். மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள். ஆரோனும் அவர்களுடைய வார்த்தைகளை கேட்டு, அவர்களிடமிருந்த பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான்.

அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொல்லி, அவர்களுக்கு தேவன் விதித்த வழியை சீக்கிரமாய் விட்டு விலகி, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டார்கள். ஆகையால் கர்த்தர் கோபம் கொண்டவராய் மோசையைப் பார்த்து இந்த ஜனங்கள் வணங்காக்கழுத்துள்ளவர்கள், நான் இவர்களை அழித்துப்போட நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார். பின்னும் கர்த்தர்: வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன் என்றார். ஆனால் மோசே கர்த்தரை நோக்கி: உம்முடைய சமுகம், பிரசன்னம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும். எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.

மேலும் மோசே உம்முடைய மகிமையை நான் காணவேண்டும் என்றும் வேண்டினார். இப்படி மோசே கர்த்தருடைய சமுகத்தையும், மகிமையையும் அதிகம் வாஞ்சித்தபடியால் கிருபை பெற்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயைப் பார்த்து; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும் என்று உடன்படிக்கை பண்ணினார்.

இன்று பரலோக நாட்டை நோக்கி பயணம் செய்கின்ற நீங்களும் உலகத்தால் கறைப்படாதபடி உங்களை காத்துக்கொண்டு; கர்த்தருடைய சமுகம், பிரசன்னம் எப்போதும் என்னோடுகூட இருக்க வேண்டும் என்றும், கர்த்தருடைய மகிமை என் மூலமாய் வெளிப்பட வேண்டும் என்கின்ற ஆசையோடும் ஜீவிப்பீர்கள் என்றால்; கர்த்தர் உங்களோடும்கூட இருந்து பயங்கரமானக் காரியங்களைச் செய்வார், உங்களோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் அதை காண்பார்கள், அது பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களாகக் காணப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Sam David
Word of God Church
Doha – Qatar
www.wogim.org