சர்வ ஞானி (Omniscient God)

1 கொரி 2:10,11 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/KR4_gvWGiqA

இந்த உலகத்தில் இயேசுவை தவிர மனிதனாக பிறந்தவர்களில் சாலொமோனை போல ஒரு ஞானி அவனுக்கு முன்பும் அவனுக்கு பின்பும் ஒருவரும் எழும்பவில்லை இனிமேலும் எழும்பப்போவதில்லை.தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது(1 இராஜா 4:29,30). அவனுடைய ஞானத்தை கேட்கும்படி சேபாவின் ராஜஸ்திரீ முதற்கொண்டு தேசத்து மனிதர்களெல்லாரும் ஆர்வமாக அவன் இருக்கும் இடத்திற்கு தேடி வந்தார்கள். அப்படியென்றால் யார் அதிக ஞானம் படைத்திருந்தார்களோ, அவர்களை தேடி தேசத்து தலைவர்கள் துவங்கி, எல்லா ஜனங்களும் ஓடி வந்தார்கள். சாலொமோன் இராஜாவுக்கு இருந்த ஞானமே அவ்வளவாக வியக்கும்படி இருந்ததென்றால், அவனுக்கு ஞானத்தை கொடுத்த ஆண்டவருடைய ஞானம் எவ்வளவாய் இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். நம்முடைய ஆண்டவர் ஒருவரே சர்வ ஞானி. அவருடைய ஞானத்திற்கு ஒப்பாக ஒருவரையும் சொல்லமுடியாது. மனுஷனுடைய சிந்தை முகத்தை பார்க்கும், தேவனுடைய சிந்தை மனுஷனுடைய இருதயத்தை பார்க்கும். எல்லா மனுஷருடைய இருதயத்தை அறிகிற ஒரே ஆண்டவர், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே. நம்முடைய யோசனைகளும், ஆண்டவருடைய யோசனைகளும் பூமிக்கும் வானத்திற்கும் எவ்வளவு தூரமோ, எவ்வளவோ தூரம் வேறுபட்டிருக்கிறது. காரணம் அவர் சர்வ ஞானி.

நீதி 13:20 கூறுகிறது ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான் என்பதாக. இந்த உலகத்தில் நாம் ஞானவானாக ஜீவிக்க வேண்டுமென்றால் சர்வ ஞானம் படைத்தவரோடு சஞ்சரிக்கவேண்டும். ஏனோக்கு 300 வருடங்கள் தேவனோடு சஞ்சரித்ததுபோல, நாமும் தேவனோடு ஒவ்வொருநாளும் சஞ்சரிக்கவேண்டும். அப்பொழுது தான் நாம் ஞானத்தை பெற்றுக்கொள்ளமுடியும். உலக அறிவிற்கும், தெய்வீக ஞானத்திற்கும் அநேக வேறுபாடுகள் இருக்கிறது. உலக அறிவை பல புஸ்தகங்களை படித்து தெரிந்துகொள்ளலாம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது ஒரு பிரபலமான தமிழ் பழமொழி. இதன் பொருள், வெறும் புத்தக அறிவு வாழ்க்கைக்குப் போதுமானது அல்ல; அனுபவ அறிவும் மிக அவசியம் என்பதாகும். புத்தகங்களில் படித்த விஷயங்களை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தாவிட்டால், அது பயனற்றது என்று இந்த பழமொழி விளக்குகிறது. இந்த புத்தகங்களினால் வரும் அறிவு தற்காலிகத்திற்கு தேவையானது. ஆனால் தெய்வீக ஞானம் என்பது தற்காலிகத்திற்கும், விண்ணுலக வாழ்விற்கும் இன்றியமையானது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் என்று யாக் 1:5ல் அப்போஸ்தலன் யாக்கோபு கூறுகிறான். உங்களுக்கு ஞானம் குறைவாக இருக்கிறது என்று நினைத்தால், சம்பூரணமாய் கொடுக்கிற ஆண்டவரிடம் கேளுங்கள். காரணம் அவர் ஒருவரே சர்வ ஞானி. உங்களுக்கு ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய போதிய ஞானம் இல்லை என்று எண்ணினால், சர்வ ஞானியாகிய ஆண்டவரிடம் கேளுங்கள். அப்பொழுது நீங்கள் கேட்டதை அவர் கொடுப்பார். எவ்வளவுக்கு எவ்வளவு சர்வ ஞானியாகிய கர்த்தரிடம் நீங்கள் சஞ்சரிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நீங்களும் ஞானத்தை பெற்றுகொள்ளுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org