கர்த்தருக்கு பயப்படுதல் (Fearing God)

சங் 34:11. பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/DKhlKMqQY3s

பள்ளிக்கூடத்தில் சிறுபிள்ளைகளுக்கு முதன் முதலில் சொல்லுக்கொடுப்பது ABC போன்ற எழுத்துகளும், அ ஆ இ போன்ற எழுத்துகளுமாய் இருக்கும். அதுபோலத்தான் கர்த்தருக்கு பயப்படுதல் என்ற முதல் எழுத்துகளை நாம் சரியாக படிக்காவிட்டால், எந்த ஒரு தேர்விலும் தேர்ச்சியடைய முடியாது, எந்த ஒரு வாக்குத்தத்தையும் சுதந்திரிக்க முடியாது. இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் இந்த முதல் வகுப்பிலே தோல்வியை தழுவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. தேவ ஜனங்களே, முதலாவது நீங்கள் கர்த்தருக்கு பயப்படுங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு கர்த்தருக்கு பயப்படுவதை குறித்து கற்று தாருங்கள். கர்த்தருக்கு பயப்படுவது என்றால் அவர் அடிப்பார், அவர் உதைப்பார், அவர் தண்டிப்பார் என்று சொல்லி பிள்ளைகளை பயப்படுத்தாதிருங்கள். நான் கீழ்ப்படியாமல் போனால் என் இயேசு துக்கப்படுவாரே என்ற அன்போடுகூடிய பயம் நமக்கு இருக்கட்டும்.

நீதிமொழிகள் புஸ்தகத்தில் முதன்முதலாக வருகிற நீதிமொழி என்ன தெரியுமா? நீதி 1:7 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள என்று கூறுகிறது. முதல் நீதிமொழியே கர்த்தருக்கு பயப்படுவது தான். ஆகையால் தான் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் ஆசீர்வாதம் நன்மை கிருபை போன்றவற்றையே சிந்தித்துக்கொள்ளும் முன், ABC யை நன்றாக கற்று தேறினவர்களாய் நாம் காணப்பட வேண்டும்.

கர்த்தருக்கு பயப்படுதல் போன்றவற்றை சொல்லும்போது அதை விரும்பாதவர்களும், ஆர்வம் காட்டாதவர்களும், இதெல்லாம் அடிமைத்தனம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிடுங்கள். நீதி 9:10ம் சொல்லுகிறது, கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் என்பதாக. கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது பாவத்திற்கு அடிமையாகாமல் இருப்பது, பாவத்தை வெறுப்பது, தீமையை வெறுப்பது. இதுவே கர்த்தருக்குப் பயப்படுதல் (ABCs).

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் என்று யோ 17:3 கூறுகிறது. இயேசு எப்படிப்பட்டவர் என்பதை மேலும் மேலும் அறிந்தகொள்ள வேண்டும். அதுவே தனது வாழ்க்கையின் பெரும் ஏக்கம் என்று பவுல் கூறினார். நான் அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே அவன் நோக்கமாய் இருந்தது (பிலி 3:10). அதாவது, இயேசுவை மேலும் மேலும் அறிய அவர் விரும்பினார். இயேசு எப்படிப்பட்டவர், இயேசு மக்களை எப்படி பார்க்கிறார், இயேசு சூழ்நிலைகளை எப்படி பார்க்கிறார், இயேசு விஷயங்களை எப்படி பார்க்கிறார் என்று பார்த்தால் நம்முடைய சொந்த பார்வையை நாம் மாற்றிக்கொள்ளமுடியும். அதுதான் இங்கே சொல்லப்பட்ட ஞானம். ஆகையால் இயேசுவை அறிவதற்கான முதல் படி அவருக்குப் பயப்படுவது; அவருக்குப் பயபக்தி காட்டுவது; பாவத்தை வெறுத்து நீதியை நேசிப்பது. அதன் பின்னர் நாம் அவரை நன்றாகவும் சிறப்பாகவும் அறிந்துகொள்ள முடியும். அதனால்தான் நமக்கு எவ்வளவு புத்திசாலித்தனம் இருக்கிறது என்பது கேள்வி அல்ல, மாறாக நமக்கு எவ்வளவு தெய்வ பயம் இருக்கிறது என்பதைப்பொறுத்தே, ஆவிக்குரிய அறிவிலும் ஆவிக்குரிய ஞானத்திலும் நாம் எவ்வளவு பெருகுகிறோம் என்பதை பார்க்கமுடியும். கர்த்தருக்கு பயப்படுவது தான் அடித்தளம், மூலைக்கல், அது தான் ஓட்டப்பந்தயத்தின் தொடக்கக கோடு. நீங்கள் அங்கு செல்லவில்லை என்றால், நீங்கள் எங்கும் செல்லமாட்டீர்கள். இந்த உலகத்திலிருக்கும் எல்லா அறிவின் முக்கிய பகுதி கர்த்தருக்கு பயப்படும் பயம். நீங்கள் கர்த்தருக்கு பயப்படும் பயத்தை இழக்கும் நாளில், அவரின் ஞானத்தைப் பற்றிய புரிதலை இனிப் பெற முடியாது. ஞானத்தில் அதிகரிப்பதற்கான வழி அவருக்கு பயப்படும் பயத்தில் அதிகரிப்பதாகும். இயேசுவை பற்றிய அறிவில் அதிகரிப்பதற்கான ஒரே வழி கர்த்தருக்குப் பயப்படுதலில் அதிகரிப்பதாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org