ஞானமுள்ள எறும்பு (Wise Ant)

நீதி 30:24,25 பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்…

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RKAkSFI3Xg4

எறும்பு என்பது எதிர்காலத்திற்காக தயாராகிறதாய் காணப்படுகிறது. நாமும் எதிர்காலத்திற்காக அதாவது நித்தியத்திற்காக ஆயத்தமாகவேண்டும். இந்த உலகம் தங்கள் வீடு அல்ல என்பதை உணர்ந்தவர்களாய் நாம் காணப்படவேண்டும். வாலிபன் ஒருவன் வந்து இயேசுவிடம் நித்திய ஜீவனை எப்படி சுதந்தரிப்பது என்று கேட்டான், ஆனால், இயேசு அவனுக்குள்ளிருந்த பண ஆசையை விட்டுவிடவேண்டும் என்று கூறியபோது, நித்தியத்தை குறித்து ஞானமில்லாதவனாக கடந்துபோய்விட்டான். உங்கள் பொக்கிஷம் எங்கையோ அங்கே தான் உங்கள் இருதயம் இருக்கும். உங்கள் பொக்கிஷம் எதிர்காலத்தை குறித்து, நித்தியத்தை குறித்து இருக்கட்டும். பரலோகத்தில் உங்கள் பொக்கிஷத்தை சேர்த்து வையுங்கள். அங்கே பூச்சியும் இல்லை, புழுவும் இல்லை. ஒன்றும் உங்கள் பொக்கிஷத்தை திருடமுடியாது. முட்டாள் இந்த உலகத்திற்காக மட்டுமே சேமிக்கிறான், ஆனால் நீங்கள் நித்தியத்திற்காக சேமியுங்கள். அதேபோல இந்த உலகத்துக்கடுத்த காரியத்திலும், நன்றாக வேலை செய்து சம்பாதிக்கும்போது, எதிர்காலத்துக்குரியவைகளை சேமித்துவையுங்கள். சிலர் சொல்லுவதுண்டு, சம்பளம் வந்து ஐந்து தினங்களில் அது எங்கே போகிறது என்றே தெரியவில்லை என்பதாக. நாம் எறும்பைப்போல ஞானமாக, எதிர்காலத்திற்காக சேமிக்கவேண்டும்.

எறும்பு மிகவும் சிறிய உயிரினம். ஆனால் அவை ஞானமானவை. சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள் என்று நீதி 6:6 கூறுகிறது. தாவீது யுத்த காலத்தில், யுத்த முனைக்கு கடந்து செல்லாமல், தன் வீட்டிலேயே இருந்துவிட்டான். கர்த்தருடைய பிள்ளைகள் ஒருநாளும் சோம்பேறியாக இருக்கக்கூடாது. ஒரு பட்டணத்தில் ஒருவர் வேலைக்கு ஆள் சேர்க்கும் பணிக்கு கடந்துசென்றார். காலை ஒன்பது மணிக்கு நேர்முகத்தேர்விற்கு வரவேண்டும் என்று அங்குள்ள செய்தித்தாள்களில் விளம்பரம் பண்ணப்பட்டது. கடந்து சென்ற அதிகாரி, இன்று அநேகர் வருவார்கள் என்று நினைத்து அவர் நேரத்திற்கு கடந்துசென்றார். ஆனால், ஒன்பது மணிக்கு ஒருவரும் நேர்முகத்தேர்விற்கு வரவில்லை. அவரும் காத்திருந்துபார்த்தார்; பின்பு சுமார் பதினொருமணிக்கு சிலரும், இரண்டு மணிக்கு சிலரும், பின்பு முடியும் தருவாயில் ஆறு மணிக்கு பலரும் வந்து சேர்ந்தார்கள். அந்த அதிகாரி ஏன் இந்த ஜனங்கள் சரியான நேரத்திற்கு வரவில்லை என்று அங்கே பணிபுரிபவர்களிடம் கேட்டபோது, அவர் சொன்னார், இந்த ஜனங்கள் எல்லாரும் மிகவும் சோம்பலுள்ளவர்கள். அதிகமணிநேரம் தூங்குவார்கள், சோம்பலுடன் தான் எந்தவொரு வேலையும் செய்வார்கள் என்று கூறினார். அதினிமித்தமாகவே அந்த பட்டணம் மிகவும் வறுமையாகவும் தரித்திரம் நிறைந்ததாகவும் காணப்பட்டது. இன்று சபைக்கும் சரியான நேரத்திற்கு வருவதற்கு அநேக விசுவாசிகளுக்கு சோம்பல் தான் காரணம் என்பது தான் உண்மை.

இப்படிப்பட்டவர்கள் அற்பமான ஜெந்துவான எறும்பினிடம் ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும். எறும்பு வரப்போகிற குளிர்காலத்திற்காக கோடைக்காலத்தில் சேமித்து வைக்கும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் கூட, வரப்போகிற கடைசிகாலத்திற்காக இப்பொழுது ஆயத்தமாக வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org