சர்வவல்லமையுள்ளவர் (Omnipotent God)

ஆதி 17:1. ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fWPcM0cvg2g

ஆபிரகாமுக்கு ஆண்டவர் தன்னை சர்வவல்லமையுள்ளவராக இந்த குறிப்பிட்ட இடத்தில் வெளிப்படுத்தினார். இதற்குமுன்பு வரை அவர் சர்வவல்லமையுள்ளவர் என்ற நாமத்தில் தன்னை வெளிப்படுத்தவில்லை. எப்பொழுது தேவன் தன்னை சர்வவல்லமையுள்ளவராக வெளிப்படுத்தினாரோ, அதற்கு பின்பு தான், கர்த்தர் ஆபிரகாமின் பெயரையும், சாராளின் பெயரையும் மாற்றினார். ஆபிரகாமிடம் சொல்லுவார், இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும் (ஆதி 17:5) என்றார். ஆபிராம் என்றால் உயர்ந்த தகப்பன் என்று அர்த்தம். ஆபிராம் என்ற பெயரில் ஏதாவது குறை இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஆண்டவர் அவன் பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார். ஆபிரகாம் என்றால் திரளான ஜாதிகளுக்கு தகப்பன் என்று அர்த்தம். ஆபிராம் என்பது அவனுக்கு கைக்கு எட்டின ஆசிர்வாதம்; ஆனால், தேவன் அவனுக்கு எட்டாத, கற்பனையிலும் சிந்தித்திராத ஆசீர்வாதத்தை கொடுக்க சித்தமனார். எப்பொழுது என்று கேட்டால், அவர் தன்னை எப்பொழுது சர்வவல்லமையுள்ளவராக வெளிப்படுத்தினாரோ, அப்பொழுது தான் கற்பனையிலும் எட்டாத வாக்குத்தத்தை பெற்றுக்கொண்டான்.

சாராளை குறித்து ஆண்டவர் சொல்லும்போது, பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும் (ஆதி 17:15) என்று கூறினார். சாராய் என்றால் ராஜரீகமானவள் என்று அர்த்தம். சாராய் என்ற பெயரில் ஏதாவது குறை இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஆண்டவர் அவள் பெயரை சாராள் என்று மாற்றினார். சாராள் என்றால் ராஜகுமாரத்தி என்று அர்த்தம். சாராய் என்பது அவளுக்கு கைக்கு எட்டின ஆசிர்வாதம்; ஆனால், தேவன் அவளுக்கு எட்டாத, கற்பனையிலும் சிந்தித்திராத ஆசீர்வாதத்தை கொடுக்க சித்தமனார். எப்பொழுது என்று கேட்டால், அவர் தன்னை எப்பொழுது சர்வவல்லமையுள்ளவராக வெளிப்படுத்தினாரோ, அப்பொழுது தான் கற்பனையிலும் எட்டாத வாக்குத்தத்தை பெற்றுக்கொண்டாள்.

தேவ ஜனங்களே, தேவன் உங்களுக்கும் அவரை சர்வவல்லவராக வெளிப்படுத்துவார். நீங்கள் இதுவரைக்கும் நினைத்திராத அற்புதத்தை கர்த்தர் செய்வார். ஆபிரகாமுக்கு இப்போது வயது 99 ; சாராளுக்கு வயது 90. ஒரு குழந்தை அவர்களுக்கு பிறக்கும் என்று தேவன் சொன்னபோது இரண்டு பேரும் சிரித்தார்கள் (ஆதி 17:17 , ஆதி 18 :12). ஆனால் இரண்டு பேரின் சிரிப்பிற்கு வித்தியாசம் இருந்தது. ஆபிரகாமின் சிரிப்பு விசுவாசத்தோடுகூடிய சந்தோசம், சாராளின் சிரிப்பு சந்தேக சிரிப்பு. கடைசியில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குழந்தை பிறந்தபோது சிரிப்பு அதாவது புன்னகை என்ற அர்த்தத்திலேயே ஈசாக்கு என்று பெயரை வைத்தார்கள். உங்கள் வாழ்க்கையிலும் ஈசாக்கு உண்டாகும். எப்பொழுது என்றால்? அதற்கான பதில், தேவன் உங்கள் வாழ்க்கையில் சர்வவல்லமையுள்ளவராக வெளிப்படும்போது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உலகத்தில் ஒருவராலும் செய்யமுடியாததை சர்வவல்லமையுள்ள தேவன் ஒருவரே செய்யமுடியும். உங்கள் வாழ்க்கையின் அனைத்துப்பகுதியிலும் நீங்கள் சர்வவல்லமையுள்ளவரை பார்க்கப்போகிறீர்கள். அதன்பிறகு உங்களுக்கு நீங்கள் எதிர்பாத்திருக்கிற காரியத்தில் ஈசாக்கு உண்டாகும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org