கர்த்தர் என் மேய்ப்பர் (The Lord is my Shepherd)

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்(சங்.23:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/IDEL3s_bXug

தாவீது, கர்த்தரை தன்னுடைய மேய்ப்பனாக வைத்து ஒப்புமைப் படுத்தி எழுதியது 23வது சங்கீதமாகக் காணப்படுகிறது. அந்நாட்களில் மேய்ப்பனுடைய தொழில் தாழ்வான தொழிலாகக் கருதப்பட்டது.  தாவீதின் தகப்பனாகிய ஈசாவும் அவனை அற்பமாய் கருதி ஆடுகள் மேய்க்கும் படிக்கு வனாந்தரத்திற்கு அனுப்பினான். அவனுடைய தாழ்வில் ஆண்டவரைத் தன் மேய்ப்பனாகக் ஏற்றுக் கொண்டான், அதன்பின்பு ஒவ்வொரு நாளும் கர்த்தர் அவனை மேன்மையாக நடத்தினார். தமது ஜனமாகிய இஸ்ரவேல்  ஜனங்களை மேய்க்கிற ராஜாவாக அவனை உயர்த்தினார். ஆண்டவர் ஒரு மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார், ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார் என்று ஏசா. 40:11 கூறுகிறது. கர்த்தர் ஒவ்வொரு ஆத்துமாக்களின் நிலைமையை அறிந்து, அதற்கேற்ற விதங்களில் நடத்துகிறவர்.  அவர் நெரிந்த நாணல்களையும் மங்கி எரிகிற திரியையும் அணைக்காதவர். புதிய ஆத்துமாக்களையும், விசுவாசத்தில் பலவீனமானவர்களையும், தடுமாறுகிறவர்களையும், ஏற்கனவே பலப்பட்டவர்களையும் அவரவருடைய நிலைமைக்கேற்ப நடத்துவார். நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் என்று யோவான் 10:11ல் கூறினார். கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போய்விடுவான், ஆனால் நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனையும் கொடுப்பான். இயேசு கல்வாரிச் சிலுவையில் நமக்காக தன்னுடைய  ஜீவனைக் கொடுத்தார், அவர் உலகத்தின் முடிவு பரியந்தமும்  நம்மோடிருக்கிறவர்.  உயிரையே  உங்களுக்காகக் கொடுத்தவர், உங்கள் தேவைகளைச் சந்திப்பது நிச்சயம். இயேசு ஆடுகளின் பெரிய மேய்ப்பர் என்று எபி. 13:20 கூறுகிறது. பூமியில் ஜனங்களை நடத்துவதற்கு மேய்ப்பர்கள் தேவை. ஒரு மாணவனுக்குப் பள்ளியும் ஆசிரியர்களும் எவ்வளவு தேவையோ, அதுபோல ஒரு ஆத்துமாவிற்கு ஆலயமும் மேய்ப்பனும் அவசியம். ஆனால் இயேசு எல்லா ஜனங்களுக்கும், மேய்ப்பர்களுக்கும் அவர் பெரிய மேய்ப்பராய் காணப்படுகிறார்.  சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள், இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள் என்று 1 பேதுரு 2:25 கூறுகிறது. இயேசு சிதறுண்டவர்களைத் தன் புயத்தினால் சேர்க்கிறவர். இளைய குமாரனைப் போல வழிவிலகுகிறவர்களை  மீண்டும் தேடிச் சேர்க்கிறவர். காணாமல் போன ஒரு ஆட்டைக் கூட கண்டுபிடிக்கும் மட்டும் தேடி மந்தையில் சேர்க்கிறவர்.

கர்த்தருடைய பிள்ளைகளே, இயேசுவை உங்கள் மேய்ப்பராக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, அவர் உங்களை  தாழ்ச்சியடைய ஒருநாளும் விடுவதில்லை. சிங்கக்குட்டிகள் கூட ஒருவேளை தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கலாம், ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கு ஒரு நன்மையும் ஒருபோதும் குறைவுபடாது. அவர் யெகோவாயீரேவாக உங்கள் வாழ்க்கையில் வெளிப்பட்டு, உங்கள் எல்லா தேவைகளையும் பார்த்துக் கொள்ளுவார்.  நீங்களும் தாவீதைப் போல நான் தாழ்ச்சியடைவதில்லை என்று விசுவாசத்தோடு அறிக்கைச் செய்வீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae