நீதி 30:24-26 பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.. சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,..
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/OQWEIBhVsQE
குழிமுசல் மிகவும் சிறிய உயிரினம். ஆகையால் அது ஒரு கன்மலையின் பிளவில் தன்னை ஒளிந்து கொள்ள முடியும். அந்த உயிரினம் தன் வீட்டை கன்மலையில் கட்டிவைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு குழிமுசலை அழிக்க ஒரு சிங்கத்தாலும் மற்ற எந்த விலங்குகளாலும் அழிக்க முடியாது. நமக்கு கிறிஸ்துவே கன்மலை. கர்த்தர் மோசேயிடம் சொன்னார், இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன். (யாத் 33:21, 22) என்பதாக. தாவீது சொல்லுகிறான், கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர் (2 சாமு 22:2) என்பதாக. மாத்திரமல்ல, சங் 27:5ல் கூறுகிறான், தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார் என்பதாக.
குழிமுசல் கன்மலையில் தன் வீட்டை கட்டுகிறது. அதைத்தான் இயேசு நமக்குச் சொன்னார், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன் (மத் 7:24) என்பதாக. அப்படியென்றால் யார் ஞானமுள்ளவன்? பலகோடிகள் செலவுசெய்து பெரிய பங்களாவை காட்டியவர்களா? வீட்டிற்கே தேய்வையான கம்பளம், சோபா, சந்தன மரத்தினால் செய்யப்பட்ட கதவுகள், போன்றவற்றினால் செய்யப்பட்ட வீட்டை கட்டினவர்களா? இந்த கேள்விக்கான பதில் என்னவென்றால், கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் தன் வீட்டைக் கட்டுகிறவனே ஞானமுள்ளவன். அதாவது, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தையின் படி நடக்கிறவனே ஞானமுள்ளவன். மழை வந்து மணலை வாரிக்கொண்டுபோகும் என்பதால், இந்த சிறிய குழிமுசல் தன் வீட்டை கன்மலையில் கட்டியது. அதுபோல தான் கர்த்தருடைய வசனத்தின் மீது கட்டப்பட்டவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இயேசு அடுத்த வசனத்திலேயே கூறுகிறார். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது என்பதாக.
குழிமுசல் ஒரு சத்துவமற்ற உயிரினம். ஆனால், ஞானமுள்ளது. நீங்களும் சத்துவமற்ற சூழ்நிலையிலிருந்தாலும் ஞானத்தோடு, கன்மலையாகிய கிறிஸ்துவின் மீது, அதாவது அவருடைய வார்த்தையின் மீது கட்டுப்படுங்கள். அதுவே ஞானமான காரியம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

