மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன் (ஓசியா 11:4).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Y9kWh0SofhA
தேவன் உங்கள் மேல் வைத்த அன்பு ஒரு நாளும் ஒழியாது. நீங்கள் ஆண்டவரை விட்டு தூரம் போனாலும் அவர் தன்னுடைய அன்பின் கயிற்றினால் தம்மண்டை உங்களைக் கிட்டி இழுக்கிறவர். இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன், எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று ஆண்டவர் ஓசியா 11:1ல் கூறினார். எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து தன்னுடைய ஜனங்களை மீட்டு பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தில் அழைத்துக் கொண்டுவந்தார், அது அவர்கள் மேல் கர்த்தர் கொண்ட நேசத்தின் வெளிப்பாடாகும். எகிப்தைப் போன்ற பாவவாழ்க்கைக்குள் தான் நாமும் காணப்பட்டோம். ஆண்டவருடைய அன்பு நம்மை கண்டுபிடித்தது. உழையான பாவச் சேற்றிலிருந்து நம்மை தூக்கி எடுத்து, அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் பாவங்களற நம்மைக் கழுவித் தூய்மைப் படுத்தி, அவருடைய பிள்ளைகளாய் மாற்றினார். ஆம், அவருடைய அன்பிற்கு இணையானது ஒன்றுமில்லை.
நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன், ஆனாலும் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள் என்றும் தங்களைக் குணமாக்குகிறவரை அறியாமற்போனார்கள் என்றும் ஆண்டவர் வேதனைப் பட்டார். ஆண்டவர் அவர்கள் மேலிருந்த நுகத்தடியை முறித்து, அவர்கள் பட்சமாய் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரம் கொடுத்துப் பாதுகாத்துப் பராமரித்த பின்பும், இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை விட்டு விலகிச் சென்றார்கள். அவர்கள் பெற்ற எல்லா நன்மைகளும் தங்களுடைய கைபெலனால் வந்தது என்றும் திறமை என்றும் கருதினார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகளை அனுதினமும் செய்கிறார், ஆனால் ஆண்டவர் தான் அந்த ஆசீர்வாதத்தைக் கட்டளையிட்டர் என்பதை உணராமலே நாமும் காணப்படுகிறோம். அவைகள் வேறு வழிகளில் வந்தது என்றும் நினைத்து ஆண்டவரை விட்டு விலகிச்செல்லுகிற வேளைகளும் உண்டு. இனி நாம் அப்படிப்பட்டவர்களாய் காணப்படலாகாது.
கயிறு என்பது ஓர் இணைப்பையும் உறவையும் குறிக்கிறது. முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது என்று பிரசங்கி 4:12 கூறுகிறது. புதுமணத் தம்பதிகள் இயேசுவோடு இணைந்து மூன்று பேராய் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் போது அந்தக் குடும்ப உறவு கடைசி வரைக்கும் நிலைக்கும். அதுபோல ஒவ்வொருவரையும் கர்த்தர் தன்னுடைய அன்பினால் தன்னோடு இணைக்கும்படிக்கு விரும்புகிறார். கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவரை உங்கள் ஆத்தும நேசராகக் கொள்ளுங்கள். அவருடைய அன்பிலே உங்களை இழந்து இளைப்பாறுங்கள். அவருடைய அன்பு ஒன்றே நிரந்தரமானது. இந்த புதிய மாதத்தில் ஆண்டவரோடு காணப்படுகிற உங்கள் அன்பு பெருகட்டும். அவர்மேல் வைத்திருக்கிற உங்கள் நேசத்தை வேதத்தைத் தியானிப்பதிலும், ஜெபிப்பதிலும், அவருடைய சமூகத்தைத் தேடுவதிலும் வெளிப்படுத்துங்கள். அப்போது கர்த்தர் உங்கள் பட்சமாய் சாய்ந்து, எல்லாவித நன்மைகளையும் உங்களுக்கு மேன்மேலும் தந்து உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

