சங் 139:7,8 உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/to442hGQXeY
நம்முடைய ஆண்டவர் எங்கும் நிறைந்திருப்பவர். யோனா ஆண்டவருடைய சமூகத்திற்கு மறைவாக ஓடி ஒழிந்தான். ஓடி ஒழிவதற்கு கப்பலின் அடித்தட்டை தேர்ந்தெடுத்தான். ஆனால், கர்த்தருடைய கண்களுக்கு மறைவாக அவன் ஒழிய முடியவில்லை. கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. சாத்தானால் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மாத்திரம் தான் இருக்க முடியும். ஆனால் நம்முடைய ஆண்டவரால் ஒரே நேரத்தில் பூமியிலிருக்கும் எல்லா இடத்திலும் தன்னை, தனித்தனியாக, நபருக்கு நபர் தரிசனமாகக்கூடிய ஆற்றலைபடைத்தவர்.
பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. அவர் எங்கும் நிறைந்திருப்பதால், நாம் போகும் இடமெல்லாம் அவருடைய பிரசன்னத்தினால் நம்மை சூழ்ந்துகொள்ளுகிறார். எங்கும் வருகிற, எங்கும் நிறைந்திருக்கிற அவருடைய பிரசன்னம் நமக்கு பாதுகாப்பை கொடுக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆண்டவர் இருக்கிறார் என்று சொல்வது, அவர் நம்முடன் இங்கே இருக்கிறார், உண்மையில் இங்கே இருக்கிறார், அதே வேளையில் மற்ற பல இடங்களிலும் இருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு ஆசிரியர் வருகைப் பதிவை எடுத்து, இந்த மாணவன் இருக்கிறான் என்று பதிவிடுகிறார்கள். ஏனெனில் அவனது உடல் அவனுடைய இருக்கையில் உள்ளது. அதுபோல, ஆண்டவருடைய பிரசன்னம் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்கிறது.
ஒரு தகப்பன் இயேசுவினிடம் வந்து என் மகன் சாகும் முன்னே நீர் அங்கே வந்து அவனை சொஸ்தமாக்க வேண்டும் என்று கூறினான். அதற்கு இயேசு நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். இயேசு அந்த மகனை நேரில் சந்தித்து சொஸ்தமாக்க போகவில்லை. ஆனால் இயேசு சொன்ன வார்த்தையை நம்பி போனான். அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். உடனே அந்த தகப்பன் எந்த மணி நேரத்தில் அவன் மகன் சொஸ்தமானான் என்று கேட்டான். அவன் சொஸ்தமான மணி நேரமும், இயேசு நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று சொன்ன நேரமும் ஒன்றாக இருந்தது. என்ன ஆச்சரியம் பாருங்கள். இயேசு பல மயில் தூரத்தில் வந்த தகப்பனிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, மரண தருவாயில் இருந்த மகனை அவர் பிரசன்னத்தினால் நிரப்பி, அவனை சொஸ்தமாக்கினார்; காரணம், அவர் எங்கும் நிறைந்திருப்பவர். சர்வ வியாபி என்பது அவருடைய நாமங்களில் ஒன்று. அவர் பூலோகத்திலிருக்கும்போதே, பரலோகத்திலும் இருக்க முடியும். அப்படிப்பட்ட ஆற்றல்மிக்க கர்த்தரை தான் நாம் ஆராதித்துக்கொண்டு வருகிறோம்.
சர்வ வியாபியாக கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் இதுமுதற்கொண்டு இருக்கப்போகிறார். நீங்கள் எங்கு சென்றாலும் அவர் உங்களோடு வருவார். அவர் உங்களைவிட்டு விலகுவதுமில்லை உங்களை கைவிடுவதுமில்லை. அவருடைய நாமங்களில் ஒன்று இம்மானுவேல் என்பதாகும். இம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். சர்வ வியாபி கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்யும்போது, நீங்கள் எங்கு இருந்தாலும், அங்கே அற்புதம் இருக்கும். அதை தான் மரணத்தருவாயில் இருந்த அந்த மகனுக்கு செய்தார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

