தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம் பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே(2 கொரி. 6:16).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gFO-8Oc1Zyo
பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும், தேவன் நம்மை விஷேசித்தவர்களாய் பிரித்தெடுத்ததின் நோக்கம் அவர் நம்மை ஆலயமாக்கி நமக்குள்ளே வாசம் செய்யும் படிக்கு என்பதைக் கர்த்தருடைய பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டும். ஊரில் ஒருவனாய் வம்சத்தில் இரண்டு பேராய் உங்களைக் கர்த்தர் தெரிந்தெடுத்திருக்கிறார். ஆகையால் மற்றவர்களைப் போல நாம் வாழ முடியாது. மற்றவர்கள் செய்கிற பாவப் பழக்க வழக்கங்களில் ஈடுபடமுடியாது. நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீரென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார் என்று 2 கொரி. 6:17,18 கூறுகிறது. நாம் பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியம் செய்தால் மட்டும் ஆண்டவருடைய குமாரர்களாய், குமாரத்திகளாய், அதாவது பிள்ளைகளாய் காணப்பட முடியும்.
இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைக்கிறவர்கள் உலகத்தோடு ஒன்றித்துப் போன ஜீவியம் செய்கிறார்கள். இப்பிபஞ்சத்திற்குரிய வேஷத்தை தரியாதிருங்கள் என்று ஆண்டவர் கட்டளையிட்டிருந்தும் உலக ஜனங்களைப் போலவே வாழ்கிறவர்கள் அனேகர் உண்டு. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக, நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்று ஆண்டவர் நம்மைப் பார்த்துக் கேட்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் ஜாதிகளோடு கலவாமல் தனியே வாசம் பண்ணினார்கள், அதைக் கண்ட பிலேயாம், பாலாக் ராஜாவிடம் அழகிய மோவாபிய ஸ்திரீகளை அவர்கள் பாளயத்திற்குள்ளாய் அனுப்பும்படி ஆலோசனை கூறினான். பாலாக் அவ்வண்ணமாய் செய்ததின் நிமித்தம் சுமார் இருபத்தி நாலாயிரம் பேர் மரித்துப் போனார்கள். இந்நாட்களிலும் தேவனுடைய பரிசுத்த வித்தைக் கறைப்படுத்தும் படிக்கு சத்துரு பலவிதத் தந்திரங்களைப் பயன்படுத்துகிறான். அவனுடைய தந்திரங்களை முன்னறிந்து, அவனுக்கு எதிர்த்து நிற்பதற்குப் பதில், அவனுடைய வலையில் விழுந்து, தங்கள் ஆத்துமாக்களைக் கறைப்படுத்திக் கொண்டவர்கள் அனேகர்.
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார், தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது, நீங்களே அந்த ஆலயம் என்று 1 கொரி. 3:17,18 கூறுகிறது. ஆகையால் ஒருநாளும் கர்த்தருடைய ஆலயமாகிய உங்கள் சரீரத்தைக் கெடுத்து விடாதிருங்கள். மாறாக, உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாய் நீங்கள் ஒப்புக் கொடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யும் போது, கர்த்தர் உங்களுக்குள் வாசம் பண்ணி, உங்களை ஆசீர்வதித்து, உங்களை உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

