சங் 66:18 என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/r_mIZmX0zuw
நம்முடைய ஆண்டவர் ஜெபங்களை கேட்கிறவர். ஆனால் அநேகருடைய ஜெபங்களை ஆண்டவர் கேட்கவில்லை செவிகொடுக்கவில்லை என்று உங்களுக்கு தெரியுமா? காரணம் இருதயத்தில் அக்கிரம சிந்தை வைத்துக்கொண்டே ஜெபிக்கிறவர்களுக்கு ஆண்டவர் செவிகொடுப்பதில்லை. வீட்டிலிருக்கும் கணவனுடன் சண்டைபோட்டுக்கொண்டு, முழுநேர ஜெபக்கூட்டத்திற்கு செல்லும் மனைவிமார்களுடைய ஜெபம் கேட்கப்படாது. மனைவியிடம் கசந்துகொண்டு என்னதான் கணவன்மார்கள் கரங்களை உயர்த்தி ஜெபித்தாலும், அந்த ஜெபம் கேட்கப்படாது. யாருடனும் கசப்பு எண்ணத்தை இருதயத்தில் வைத்துக்கொண்டு ஒருவேளை ஆண்டவரிடம் முட்டிமோதி ஜெபிப்பீர்களென்றால், முதலாவது உங்கள் ஜெபத்தை நிறுத்திவிட்டு, காயப்படுத்தின கசப்புகொண்ட நபரிடம் ஒப்புரவாகுங்கள். பின்பு, ஆண்டவரை நோக்கி ஜெபம் செய்யுங்கள்; அப்பொழுது உங்கள் ஜெபம் கண்டிப்பாகவே கேட்கப்படும்.
ஒருவேளை நீங்கள் இருக்கும் இடத்தில் தீவிரவாதிகள் குண்டு போடுகிறார்களென்றால், உங்களால் எவ்வளவு வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓடமுடியுமோ, அந்த அளவிற்கு ஓடுவீர்களல்லவா ? ஒரு Hyper Marketல் ஐபோன் இலவசமாக தருவதாக கேள்விப்படுவீர்களென்றால், சுமார் ஐம்பது கிலோமீட்டர் வேகத்திற்கு யாரும் பிடிக்கமுடியாத அளவிற்கு ஓடுவீர்களல்லவா? அதைக்காட்டிலும் அதிவேகமாக காயப்படுத்தினவர்களை, குற்றப்படுத்தினவர்களை மன்னிக்கவும் ஒப்புரவாகவும் விரைந்தோடுங்கள். எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து என்று மத் 5:25ல் ஆண்டவர் கூறியிருக்கிறார்.
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது. நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள். என்று ஏசா 59:2-4 கூறுகிறது. இந்த வசனத்தில் பாருங்கள் பொய், நியாயக்கேடு, தாறுமாறு, உதடு, அபத்தமானதை பேசுவது போன்றவை எழுதப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நாவை உடையவர்களின் ஜெபம் கேட்கப்படாது. நம்முடைய வாயில் தேவனை துதிப்பதும், மனிதனை சபிப்பதும் ஒன்றிணைந்து வரக்கூடாது.
ஆகையால் இப்பொழுதே ஒரு காரியத்தை சோம்பலில்லாமல் செய்யுங்கள். யார் யாரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும், யார் யாரை மன்னிக்கவேண்டும் என்ற ஒரு பட்டியலை எடுங்கள். அந்த நபர்களையெல்லாம் தேடி போய் சந்தியுங்கள். தூரத்திலிருந்தால் தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள். பெருமைக்கு இடம்கொடாமல் மன்னிப்பு கோருங்கள். இல்லையென்றால் சுத்தமானசாட்சி வராது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் இருதயத்தில் இருக்கும் அக்கிரம சிந்தையை வெளியே எடுத்துபோடுவீர்களென்றால், உங்கள் ஜெபம் நிச்சயமாக கேட்கப்படும். உங்கள் ஜெபத்திற்கு நிச்சயமாக பதில் வரும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

