எபி 13:12. அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/kRhKTuhXENE
ஒரு நாட்டிற்கு பயணம் மேற்கொண்டால், அங்கே அந்த நாட்டின் அங்கீரரிக்கப்பட்ட பணம் இருந்தால் மாத்திரமே நாம் எதையும் வாங்கவும் விற்கவும் செய்யமுடியும். அமெரிக்காவிற்கோ, ஐரோப்பாவிற்கோ சென்று நாம் ரூபாய் நோட்டை வைத்து எதையும் வாங்கவோ விற்கவோ முடியாது. அதுபோல தான் நாம் பரலோக பிரஜைகளாக மாறவேண்டுமென்றால், இயேசுவின் சொந்த இரத்தத்தால் நாம் கழுவப்பட்டிருக்கவேண்டும். அவருடைய சொந்த இரத்தத்தால் நாம் கழுவப்படவில்லையென்றால், நமக்கு அவரிடத்தில் பங்கில்லை என்பதை பேதுருவிடம் இயேசு சொன்னதை வைத்து நாம் அறிந்துகொள்ளலாம்.
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே என்று லேவி 17 :11 கூறுகிறது. பாவநிவிர்த்தி செய்கிற இரத்தம் பிதாவினால் அங்கீகரிக்கப்பட்ட இரத்தமாய் காணப்பட வேண்டும். ஆதாம் ஏவாளுக்கு பிறந்த காயீனும் ஆபேலும் கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க சென்றார்கள். காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். கர்த்தர் காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. ஆனால் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். காரணம் ஆபேல் கொண்டு வந்த காணிக்கை தலைசிறந்தது என்பதோடு அல்லாமல், அவன் கொண்டுவந்த காணிக்கையில் இரத்தம் இருந்தது. காயீன் கொண்டு வந்த காணிக்கையில் இரத்தம் காணப்படவில்லை. கர்த்தர் ஆபேலின் காணிக்கையை அங்கீகரிப்பதற்கு முன்பாக ஆபேலை அங்கீகரித்தார். பின்பு அவன் காணிக்கையை அங்கீகரித்தார். அதுபோலத்தான் இயேசு மற்றவர்களுடைய இரத்தையல்ல, தன்னுடைய சொந்த இரத்தத்தை நமக்காக ஊற்றி கொடுத்தார். பிதாவானவர் இயேசுவையும் இயேசுவின் இரத்தத்தையும் அங்கீகரித்தார். அங்கீகரிக்கப்பட்ட இயேசுவின் இரத்தம் மாத்திரமே நம்மை பரிசுத்தமாக்கும், நம்மை பாதுகாக்கும், நம்மை பரலோக பிரஜைகளாக மாற்றும்.
1 யோவா 3:16 கூறுகிறது, அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். இந்த வசனத்தை பார்த்தீர்களா? தம்முடைய ஜீவனை இயேசு கொடுத்தார் என்றும், நமக்காக அவருடைய ஜீவனை கொடுத்தார் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல தான் எபி 13:12லும் தம்முடைய சொந்த இரத்தத்தால் ஜனத்தை பரிசுத்தம் செய்ய நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய சொந்த இரத்தம் தான் நமக்கு வேண்டும். மற்ற ஆடு மாடுகளின் இரத்தம் இனி நமக்கு தேவையில்லை. இயேசுவின் சொந்த இரத்தம் என்பது உங்களுக்கு கிடைத்த விலைமதிப்பில்லாத சொத்து என்பதை புரிந்துகொண்டிருக்கிறீர்களா? அமெரிக்கா அதிபர் உங்களுக்கு அவருடைய சொந்த அரண்மனையை பரிசாக கொடுத்தால் எவ்வளவு வியப்பாகவும் சந்தோசமாகவும் உங்களுக்கு இருக்கும். அதைக்காட்டிலும் மேலாக, இயேசு உங்களுக்காக அவருடைய விலைமதிப்பில்லாத சொந்த இரத்தத்தை ஊற்றி கொடுத்துவிட்டார். ஆகையால் நீங்கள் சந்தோசத்தோடு, அந்த இரத்தத்தை பயன்படுத்த ஆரம்பியுங்கள். இயேசுவின் சொந்த இரத்தமே நம்மை பாதுகாக்கும், இரட்சிக்கும், நீதிமானாக்கும், பரிசுத்தமாகும், சாத்தானின் சகல தந்திரங்களையும் நிர்மூலமாக்கும். இயேசுவின் சொந்த இரத்தத்தை பயன்படுத்த ஆரம்பியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

