பயப்படத்தக்கவரும், அஞ்சப்படத்தக்கவரும் (A God greatly feared and revered)

சங்கீதம் 89:7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/O4Z-c0NpxT0

அரசியல்வாதிகளுக்கோ, உலக தலைவர்களுக்கோ எந்தவொரு கூடுகையாக இருந்தாலும் அவர்கள் கடைசியாக தான் வருவார்கள். எல்லாருடைய எதிர்பார்ப்பும் கூடும்போது, தங்களை காண்பித்துக்கொள்ள தாமதமாக வருவார்கள். இப்படித்தான் ஒரு அலுவலகத்தில் வேலை செய்த தேவபிள்ளைக்கும், அவருடைய மேல் அதிகாரிக்கும் ஒரு சந்திப்பு அதாவது Meeting திட்டமிடப்பட்டிருந்தது. அந்த தேவபிள்ளை, மற்றொரு வேலை காரணத்தினிமித்தம், அந்த மீட்டிங்க்கு இரண்டே நிமிடங்கள் தான் தாமதமாக கடந்து சென்றார். அந்த மேல் அதிகாரிக்கு வந்தது பாருங்கள் கோபம்!. உடனே அவருக்கு கீழ் பணிபுரியும் தேவபிள்ளைக்கு எச்சரிக்கை கடிதத்தை கொடுத்துவிட்டார்.

ஆனால் நம்முடைய தேவன் முற்றிலும் மாறுபட்டவர். அவர் எங்கே இரண்டோ மூன்றோ பேர் அவருடைய நாமத்தில் கூடியிருக்கிறார்களோ அவர்கள் நடுவில் இருக்கிறவர். அவர் நாமங்களில் ஒன்று இருக்கிறேன் என்பதாகும். அநேக மாதங்கள் கழித்து வெளிநாட்டிலிருந்து வரும் மகனையோ மகளையோ விமான நிலையத்திலிருந்து அழைத்துவர, சரியான நேரத்திற்கு கடந்து சென்று தங்கள் பிள்ளையை அழைத்துவர, அன்பு பெற்றோருக்கு இருக்குமல்லவா? தன் பிள்ளை நான் சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வராவிட்டால், பிள்ளை ஏமார்ந்துபோயிடுவான் என்ற எண்ணம் நல்ல பெற்றோருக்கு இருக்குமல்லவா? அதுபோல தான், நம்முடைய ஆண்டவர், பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் அவர் வரவேண்டும் என்று ஆவலாய் இருக்கிறவர். அவருடைய ஜனங்களுடைய கூடுகையை தவிர்த்துவிடாமல் இருக்கும்படி மிகவும் கவனமாக இருக்கிறவர். அவர் நம்முடைய பயபக்திக்குரிய நல்ல தேவன். அப்படிப்பட்ட தேவன் மேல் நாம் பயபக்தியாய் காணப்படவேண்டும். நான் கர்த்தாரென்றால் எனக்கு பயப்படும் பயம் எங்கே என்று கர்த்தர் கேட்கிறார். இன்று அநேக சபைகளில், விசுவாசிகளுக்கு கர்த்தரை குறித்து பயம் இல்லை. அநேக ஆராதனை கூட்டத்தில் கர்த்தர் அசட்டை பண்ணப்படுகிறார்.

மாத்திரமல்ல, தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர். அவரை நாம் ஆராதிக்கும்போது, அவருடைய பிரசன்னத்தினால் நம்மை நிரப்பாமல் விட்டுவிடக்கூடாது என்று நினைப்பவர். ஆகையால் விசுவாசிகள் ஒன்று கூடிவரும்போதும், அவரை ஆராதிக்கும்போதும், அவர் மீது இருக்கும் பயம், நடுக்கம், மனத்தாழ்மை, கீழ்ப்படிதல், மரியாதை போன்றவை நமக்கு காணப்படவேண்டும். கர்த்தருக்கு பயப்படுவது தான் ஞானத்தின் ஆரம்பம். ஆகையால் நீங்கள் மனிதர்களுக்கு பயப்படவேண்டாம், அதிகாரிகளுக்கு பயப்படவேண்டாம், சூழ்நிலைகளை பார்த்து அஞ்சவேண்டாம். மாறாக, கர்த்தருக்கு பயப்படுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை எட்டாத உயரத்தில் கொண்டுபோய் உங்களை மகிழ்ந்திருக்கும்படி செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org