முள்ளும், கிருபையும் (Thorn and Grace)

அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய  மேன்மையினிமித்தம் நான் என்னை  உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது, என்னை நான்  உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது(2 கொரி. 12:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EHV5MDXQEfA

வேதாகமத்தில் முள் என்பது சாபம், வேதனை, கஷ்டங்களுக்கு ஒப்பாக எழுதப்பட்டிருக்கிறது. யாக்கோபுக்கு லாபான் ஒரு முள்ளாக இருபது வருடங்கள் காணப்பட்டான். தாவீதுக்கு சவுல் ஒரு முள்ளாகக் காணப்பட்டு அவனுடைய உயிரை ஒரு தௌளுப்பூச்சியைப் போல வேட்டையாடினான்.  அன்னாளுக்குப் பிள்ளை இல்லை என்ற நிலை ஒரு முள்ளாகக் குத்திக் கொண்டிருந்தது. அப்போஸ்தலனாகிய பவுலுக்கு  அவனுடைய சரீரத்தில் காணப்பட்ட ஒரு பலவீனம் அவனைக் குத்துகிற ஒரு முள்ளாகக் காணப்பட்டது. சில வேளைகளில் முட்கள் கூட நமக்கு ஆசீர்வாதமாகக் காணப்படுகிறது. பவுலுக்கு ஆண்டவர் அனேக வெளிப்பாடுகளைக் கொடுத்திருந்தார். பலமுறை ஆண்டவர் அவனுக்குத் தரிசனத்தில் தன்னை வெளிப்படுத்தினார். கர்த்தர் அவனை மூன்றாம் வானம் வரைக்கும் அழைத்துச் சென்று அனேக வெளிப்பாடுகளைக் கொடுத்தார். அவனுக்கு வெளிப்படுத்தப்பட்ட மேன்மையான காரியங்களின் நிமித்தம் அவன் தன்னை உயர்த்திவிடக் கூடாது என்பதற்காகக் கர்த்தர் அவனுடைய சரீரத்தில் ஒரு முள்ளைக் கொடுத்தார். அது அவனைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருந்தது. எப்போதெல்லாம் மேட்டிமையின் சிந்தை அவனுக்குள் வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த முள் அவனைக் குத்துகிறதாய் காணப்பட்டது. ஆகையால் அவன் தாழ்மையோடு, கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்து, இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காய் அவனுக்கு லாபமாயிருந்தவற்றை நஷ்டம் என்றும் குப்பை என்று ஒதுக்கித் தள்ளினான். அவனுக்காகக் கர்த்தர் நியமித்த ஓட்டத்தில் பொறுமையோடு, இயேசுவாகிய இலக்கை நோக்கி, ஆசையாய் ஓடுகிறவனாய் காணப்பட்டான். அவனுடைய ஓட்டத்தின் முடிவில் நீதியின் கிரீடத்தையும் பெற்றுக்கொண்டான்.

கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் முட்களுக்குள்ளே மலருகிற லீலிபுஸ்பமாய் காணப்படுகிறீர்கள். இந்நாட்களில் சிற்சில காரியங்கள் உங்களுக்கு எதிராகவும், உங்களை வேதனைப்படுத்துகிறதாகவும் காணப்பட்டாலும், முடிவில் அது உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். கடைசியில் சங்கீதக்காரனைப் போல, நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொண்டேன் என்று நீங்களும் சாட்சி பகருவீர்கள். ஆகையால்   தற்காலப் பாடுகளைக் கண்டு சோர்ந்து போய்விடாதிருங்கள். பவுலுக்கு, முள்ளைப் போன்ற அவனுடைய உபத்திரவத்தின் மத்தியில் கர்த்தர் கிருபையைக் கொடுத்து, என் கிருபை உனக்குப் போதும் என்ற வாக்குத்தத்தையும் கொடுத்தார். அவன் கிருபையை சார்ந்து ஓடி ஜெயங்கொள்ளுகிறவனாய் காணப்பட்டான். அவனைப் போல ஆண்டவர் உங்கள் பாடுகள், உபத்திரவங்கள், வியாதிகள், கஷ்டங்கள் மத்தியில் வேண்டிய கிருபைகளை உங்களுக்குத் தருவார்.  அவருடைய கிருபை உங்களைத் தாங்கி, அனுதினமும் உங்களை நடத்தும். நீங்கள் ஒருநாளும் தோற்றுப் போவதில்லை, உங்கள் முகங்கள் அவமானம் அடைவதுமில்லை. உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae