வாலிபர்களுக்கு (For Youth)

எரே 1:6. அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/X8lD3ywfZVQ

எரேமியாவை ஆண்டவர் தீர்க்கதரிசியாக அழைத்தபோது, அவனுடைய பதில், எனக்கு பேசத்தெரியது, காரணம் நான் சிறுபிள்ளை என்று சொன்னான். மோசேயும் அதேபோலத்தான், நான் திக்குவாயும் மந்த நாவுமுள்ள மனுஷன் என்று சொன்னான். ஆங்கிலத்தில் சிறுபிள்ளை என்பதற்கு Youth என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அநேக வாலிபர்கள் என்னால் ஆண்டவருக்காக ஜெயமுள்ள வாழ்க்கையோடு ஓடமுடியவில்லையே என்ற ஆதங்கமும், அநேகருக்கு என்னால் முடியாது என்று தாழ்ந்த மனதோடும், காணப்படுகிறார்கள். வாலிபர்களே, கர்த்தர் உங்களை அவருடைய ஊழியத்திற்கென்று அழைக்கிறாரென்றால், கடைசிமட்டும் உங்களை நடத்துவதற்கு போதுவானவராய் இருக்கிறார் என்பதை எரேமியாவின் சம்பவத்திலிருந்து நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

எரே 1:5ல் நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். அதாவது கர்த்தர் எரேமியாவை தெரிந்துகொண்டார் என்று அர்த்தம். எரே 1:7ல் நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக என்றார். அதாவது, நானே உன்னை அனுப்புகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரே 1:8ல் உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்றார். அதாவது, உறுதுணையாக, உதவியாக உன்னை காத்துக்கொள்ளுவேன் என்று கூறினார். எரே 1:9ல் இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன் என்றார். அதாவது, நான் உனக்கு வழிகாட்டியாக, உன்னை போதித்து நடத்தும் ஆசிரியனாக இருப்பேன் என்று கூறினார். எரே 1:10ல் பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார். அதாவது, நான் அங்கீகாரம் செய்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரே 1:17ல் நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு என்றார். அதாவது, நான் உன்னை பலப்படுத்துகிறேன் என்று கூறினார்.

ஆகையால் வாலிபர்களே, நான் சிறுபிள்ளை, நான் வாலிபன், என்னால் எப்படி பெரிய ஊழியத்தை செய்ய முடியும் என்று கேள்விகேட்காமல், முன்னேறிசெல்லங்கள். அழைத்தவர் உண்மையுள்ளவர். முடிவுப்பரியந்தம் உங்களை நடத்த அவர் போதுமானவராய் இருக்கிறார். யோசேப்பு வாலிப பிராயத்திலிருக்கும் போது தான் தரிசனங்களை பெற்றுக்கொண்டான். தானியேல் வாலிபனாய் இருக்கும்போது தான் உயர்த்தப்பட்டான். வாலிபப்பிராயத்திலுக்கும் நீங்கள் உங்கள் சிருஷ்டிகரை நினையுங்கள். வாலிபன் வசனத்தினால் மாத்திரமே தன்னை சுத்திகரிக்கமுடியும். ஆகையால் ஒவ்வொருநாளும் வசனத்தை தியானிக்க உங்களை அற்பணியுங்கள். அந்த வசனமே உங்களை கடைசிமட்டும் நடத்தும். வாலிபன் பலவான் கையிலிருக்கும் அம்புக்கு ஒப்பாய் இருக்கிறான். நீங்கள் கர்த்தருடைய கையிலிருக்கும் அம்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org