ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்று நாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள் (மாற்கு 8:2).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mZ8QAelunN4
இயேசு உங்களுக்காக பரிதபிக்கிறவர், உங்கள் மேல் மனதுருக்கமுடையவர். அவருடைய மனதுருக்கம் உங்கள் வாழ்க்கையில் அற்புதம் செய்யும், உங்கள் தேவைகளைச் சந்திக்கும். இயேசு இந்த பூமியில் காணப்பட்ட நாட்களில் திரளான ஜனங்கள் அவரண்டை கூடிவந்தார்கள். அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும், வியாதிகளிலிருந்தும், பிசாசின் பிடிகளிலிருந்தும் விடுவிக்கப் படவும் ஆண்டவரண்டை வந்தார்கள். இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் ஆண்டவரண்டை கூடிவந்தவர்களுக்கு மூன்று நாட்கள் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாமல் காணப்பட்டது. அவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், அவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்கள் என்பதை ஆண்டவர் அறிந்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, இயேசு உங்கள் நிலைமைகளை அறிந்தவர். உங்கள் சூழ்நிலைகளை அறிந்தவர். நீங்கள் சோர்ந்து போவீர்கள் என்பதையும் அறிந்தவர். ஆகையால் குறித்த வேளையில் உங்கள் தேவைகளைச் சந்தித்து உங்களை மகிழப்பண்ணுவார்.
இயேசுவின் சீஷர்கள், ஆண்டவரை நோக்கி, இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள். இதற்கு முன்பு, ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேரைக் கர்த்தர் போஷித்ததையும், அவைகளில் மீதியானவற்றைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்ததையும் சீஷர்கள் மறந்து போனார்கள் (மாற்கு 6:34-44). நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தர் அனேக நன்மைகளைச் செய்திருந்தும், அவருடைய அற்புதங்களைக் கண்டிருந்தும், கொஞ்ச நாட்களில் நாம் எல்லாவற்றையும் மறந்து, மீண்டும் ஒரு தேவை, பிரச்சினை என்ற நிலை வரும்போது சோர்ந்து போய்விடுகிறோம். தாவீது கோலியாத்தோடு யுத்தம் செய்ய விரும்பினபோது, சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது, நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்ற வேளையில், தாவீது தான் ஏற்கனவனே பெற்ற வெற்றியைக் குறித்து பேசினான். உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன், அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன், விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான். அதுபோல, நாமும் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த அற்புதங்களையும், அடையாளங்களையும் குறித்துப் பேசுகிறவர்களாகவும், நினைவு கூருகிறவர்களாகவும் காணப்படவேண்டும்.
கர்த்தருடைய மகத்துவத்தை மறந்து, இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்ற சீஷர்களைப் பார்த்து கர்த்தர், உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள். அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார், அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். சில சிறுமீன்களும் அவரிடத்தில் இருந்தது, அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள், மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே! உங்கள் கரங்களில் காணப்படுவது என்ன, அதைக் கர்த்தரிடம் கொடுங்கள். அதை ஆசீர்வதித்துப் பெருகப்பண்ணுகிறவர், அவரால் எல்லாம் கூடும். கர்த்தருடைய மனதுருக்கம் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்யும். அவருடைய காருண்ணியம் உங்களைப் பெரியவனாக்கும். இம்மட்டும் உங்கள் தேவைகளைச் சந்தித்து உங்களை நடத்துகிறவர், இனிமேலும் நடத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

