நீதி 30:7-9 இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/abbqN1SyqZk
ஆகூர் பக்தன் ஆண்டவரிடத்தில் இரண்டு மனுவை கேட்கிறான். ஒருவேளை ஆண்டவர் வந்து இப்பொழுது, உனக்கு என்னிடத்திலிருந்து இரண்டு விஷயங்களை கேள்; அதை நான் தருகிறேன் என்று கேட்டால், நீங்கள் ஆண்டவரிடம் என்ன கேட்பீர்கள் என்று யோசித்துப்பாருங்கள். சாலொமோன் ஞானத்தை கேட்டான். அதுபோல ஆகூர் இரண்டு காரியங்களை கேட்கிறான். முதல் மனு, மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும் என்று கேட்கிறான். எப்பொழுதாவது இப்படிப்பட்ட ஜெபத்தை நாம் ஏறெடுத்ததுண்டா ? அதிகாலையில் எழுந்திருந்து ஆண்டவரே நான் இன்று பொய் சொல்லாமல் இருக்கவேண்டும் என்று ஜெபித்ததுண்டா? இல்லையென்றால் பொய் சொல்லாமல் வாழ உபவாசம் இருந்ததுண்டா? சபையில் இன்றைக்கு அநேக விசுவாசிகளுக்கு வாயை திறந்தால் பொய் தான் வருகிறது. பொய் கர்த்தருடைய பார்வையில் மிகப்பெரிய பாவம் என்று அநேக விசுவாசிகள் நினைப்பதில்லை. அதுபோல, மாய்மாலம் பண்ணுகிற சுபாவமும் அநேகருக்கு காணுப்படுகிறது. வாயினால் பொய் சொல்லாவிட்டாலும், தங்களுடைய நடக்கையினால் மாய்மாலம் செய்கிற ஜனங்கள் உண்டு. இவைகளை தூரப்படுத்தும்படி கர்த்தரிடம் ஜெபிக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.
இரண்டாவது மனு, தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக என்று ஜெபிக்கிறான். உண்மையை சொல்லுங்கள் எனக்கு ஐசுவரியத்தை கொடாமல் இரும் ஆண்டவரே என்று வாழ்நாளில் என்றாவது நாம் ஜெபித்ததுண்டா? இப்படிப்பட்ட ஜெபம் இருக்கிறதா என்று வாழ்நாளில் ஒருநாளும் நாம் அறிந்துகொள்ள மனதை பக்குவப்படுத்தவில்லை. ஆண்டவரே எனக்கு செல்வம் கொட்டோவென்று கொட்டவேண்டும்; வானத்திலிருந்து மழை பெய்வதுபோல எனக்கு செல்வம் பொழியவேண்டும், மரத்தில் காய்களை பார்ப்பதுபோல, பணத்தை பறிக்க வேண்டும் என்றல்லவா நாம் ஜெபிக்கிறோம். நல்லது தான், ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்கவே சித்தம்கொண்டிருக்கிறார். அதேவேளையில் அந்த ஐசுவரியத்தினாலும், தரித்திரத்தினாலும் நான் கர்த்தரை விட்டு தூரம் செல்லக்கூடிய சந்தர்ப்பம் வரும் என்றறிந்து, இந்த இரண்டாவது மனுவை கொடாமல் இரும் என்று ஜெபியுங்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருவேளை உங்கள் ஐசுவரியம், உங்களுக்கும் தேவனுக்கும் இடைவெளியை கொண்டுவருமென்றால், அந்த ஐசுவரியத்தை கொடாமல் இரும் ஆண்டவரே என்று கேட்பதே நலம். என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? என்று யாக் 2:5 கூறுகிறது. ஆகையால் விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக மாறவேண்டும் என்று கர்த்தரிடம் கேளுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

