அநேக சொப்பனங்கள் மாயை (Many dreams are vanity)

பிர 5:7. அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/gt53H26BkVs

இந்த உலகத்தில் பிறந்த எல்லா மனிதருக்கும் சொப்பனங்கள் வருகிறது. வேதாகமத்தில் சொப்பனம் கண்டவர்களை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. தானியேல் தீர்க்கதரிசி சொப்பனத்திற்கு வியாக்கியானம் சொல்லுகிறவனாக காணப்பட்டான். எகிப்து தேசத்தில் யோசேப்பு சொப்பனம் கண்டு இராஜ மேன்மை அடைந்தான்.

பொதுவாக இரவு தூங்கும்போது வருகிற சொப்பனங்களை மூன்று வகையாக பிரிக்கலாம். முதலாவது, தேவனால் வருகிற சொப்பனங்கள் உண்டு. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள் என்று அப் 2:17 கூறுகிறது. இரண்டாவது, சத்துருவால் வருகிற சொப்பனங்கள் உண்டு. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான் என்று மத் 13:25 கூறுகிறது. மூன்றாவது, மனிதனுடைய தொல்லையினால் வரும் சொப்பனங்கள் உண்டு. தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும் என்று பிர 5:3 கூறுகிறது.

பகல் நேரங்களில் நாம் சந்திக்கிற பிரச்சனைகள், சூழ்நிலைகள் நம்மை பாதிக்கும்போது, அது சம்பந்தமான சொப்பனங்கள் இரவு நேரங்களில் வருகிறது. கொலை சம்பந்தமான காட்சிகளை பார்த்தோ கேட்டோ, படுக்கைக்கு செல்லும்போது, அப்படிப்பட்டதான சொப்பனங்கள் தான் அதிகமாக வரும். இச்சைகளை தூண்டிவிடும் படங்களை பார்த்தோ, சிந்தித்தோ தூங்கினால், அப்படிப்பட்டதான சொப்பனங்கள் தான் வரும். இப்படி தொல்லையை கொண்டுவருகிற சொப்பனங்களால் நம்முடைய வாழ்வாதாரம் அதிகமாக பாதிக்கக்கூடும், நம்முடைய சரீரத்தில் பாதிப்புவரும், நம்முடைய ஆவியில் வீழ்ச்சி வரும். சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள் என்று யூதா 8 வசனம் கூறுகிறது. இந்த வசனத்தில் தமிழில் சொப்பனக்காரர் என்று எழுதியிருந்தாலும், ஆங்கிலத்தில் Filthy Dreamers என்று எழுதப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அநேகர் பின்மாற்றத்திற்குள்ளாக செல்வதற்கான காரணங்களில் ஒன்று இரவு படுக்கைக்கு செல்லும்முன் வேண்டாத காரியங்களை பார்த்து, கேட்டு, இச்சைகளை வருவித்துக்கொள்வதால் தான் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ளவேண்டும். இப்படிப்பட்ட சொப்பனங்களை காண்கிறவர்களின் வாழ்க்கை நாளடைவில் பின்மாற்றம் அடைந்துவிடும்.

ஆகையால் தான் படுக்கைக்கு செல்லும்முன் நம்முடைய இருதயங்களை தேவனுக்கு நேராக திருப்பி, அந்த நாளில் தெரிந்தோ தெரியாமலா செய்த பாவங்களை அறிக்கையிட்டு விட்டுவிட்டு படுக்கைக்கு செல்லுவது நல்லது. அப்பொழுது, கர்த்தர் நல்ல ஆவிக்குரிய பாடல்கள் மூலமாகவோ, வசனங்கள் மூலமாகவோ, ஆவிக்குரிய செய்தியின் மூலமாக நம்மிடம் பேசுவார். சொப்பனங்களிலும் ஆண்டவர் உங்களோடு பேசும்படியாக உங்கள் எண்ணங்களையும் நினைவுகளையும் சிந்தைகளையும் கண்களையும் கிறிஸ்து இயேசுவுக்குள் காத்துக்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org