கிரயம் செலுத்த வா(Pay the price).

அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார் (லூக்கா 9:57,58).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5tjQi2hnY8E

இயேசு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்த போது அவர்  எருசலேமுக்குப்  போகத் தமது முகத்தைத் திருப்பி, அங்கே  தனக்குச் சம்பவிக்கப் போகிற பாடுகளையும் உபத்திரவங்களையும் கண்டு பின்வாங்கி விடாதபடி  எருசலேமுக்கு  போவதையே  நோக்கமாகக் கொண்டிருந்தார்.  அவர்  சமாரியா  வழியாக  எருசலேமுக்கு போகையில் ஒருவன் ஆண்டவரை நோக்கி, நீர் எங்கே போனாலும் உம்மை பின்பற்றுவேன் என்றான். அந்த வேளையில் நீ என்னைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் கூறாமல், அதற்குப் பதிலாக அவரைப் பின்பற்றுவதற்குரிய கிரயத்தைப்  பற்றிக் கூறினார், நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். உடனே எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றுவேன் என்று கூறினவன் காணாமல் போய்விட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, அனேக வேளைகளில் நாமும் பாடல்கள் பாடும் போதும், செய்திகள் கொடுக்கும் போதும் நான் உமக்குப் பின்னால் வருவேன், பின்னோக்கிடேன்  என்றெல்லாம் அறிக்கையிடுவதுண்டு. ஆனால் அதற்குரிய கிரயத்தைக் கொடுக்க விரும்புவதில்லை. வசதியான மண்டலத்திற்குள்   காணப்பட விரும்புகிறோமேயன்றி, சிலுவையை எடுத்துக்கொண்டு  ஆண்டவரைப் பின்பற்ற ஆயத்தமாயில்லை. 

வேறொருவனை இயேசு கண்டு, என்னைப் பின்பற்றி வா என்று அழைத்தார். அதற்கு அவன் முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றான். அதற்கு ஆண்டவர் மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார் (லூக்கா 9:59,60). அவனும் இயேசுவைப் பின்பற்றாமல் கடந்து சென்றுவிட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, குடும்பத்திற்குச் செய்யவேண்டிய கடைமைகளைப்  பார்க்கிலும் இயேசுவிற்கும், அவருடைய  ராஜ்யத்திற்குரியவற்றுக்கும்  முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறதை அறியமுடிகிறது. இயேசு தான் செய்யாததை, தன்னை பின்பற்றுகிறவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் அல்ல. ஒருவிசை அவருடைய தாயாரும் சகோதரரும் அவரோடு பேசவேண்டுமென்று காத்திருந்தார்கள். அந்த வேளையில் தன்னிடம் அந்தச் செய்தியைச் சொன்னவனைப் பார்த்து, தேவசித்தத்தை  செய்கிறவனே என்னுடைய சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறார்கள் என்றார். அனேக  வேளைகளில் நம்முடைய சுற்றமும் நட்பும் கர்த்தரைப் பின்பற்றுவதற்குத் தடைகளாய் காணப்படுவதுண்டு. ஆகையால் இயேசுவின் சீஷனாகக் காணப்படுவதற்கு, கிரயம் செலுத்த ஆயத்தமாகக் காணப்பட வேண்டும். உறவுகளை இழக்கவும் ஆயத்தமாகக் காணப்படவேண்டும். இந்நாட்களில்  சீஷர்கள் என்றும் அப்போஸ்தலர்கள் என்றும் அழைக்கப்படுகிறவர்கள் அனேகம் உண்டு. ஆனால் எதை கிரயமாய் செலுத்தியிருக்கிறார்கள் என்று சோதித்துப் பார்த்தால் அப்படி  அழைக்கப்படுவதற்குரிய  தகுதியில்லாதவர்கள் என்பதையறிய முடியும். 

வேறொருவன் இயேசுவை நோக்கி, ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில்   அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்ற வேளையில் கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல (லூக்கா 9:61,62) என்றார். இவன் ஆண்டவரிடத்தில்  கேட்டதெல்லாம்  வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் விடைபெற்றுக் கொண்டு வருகிறேன் என்பதுதான், இதில் தவறுகள் இருப்பதாக மேலோட்டமாய் பார்த்தால் தெரிவதில்லை. ஆனால் காத்தர் அனுமதி கொடுக்காததினால் அவனும் காணாமல் போய்விட்டான். எலியா தன்னுடைய ஸ்தானத்தில்  எலிசாவை  தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணக் கட்டளைப் பெற்றபின்பு, தன்னுடைய சால்வையை அவன் மேல் போட்டான். உடனே எலிசா நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்து விடைபெற உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்று கேட்ட வேளையில் போய் வா என்று எலியா கூறினான். அது பழைய உடன்படிக்கையின் நாட்கள், ஆனால் புதிய உடன்படிக்கையின் படி அதற்குரிய காலதாமதத்திற்குக் கூட அனுமதியைக் கர்த்தர் கொடுக்கவில்லை. இந்நாட்களில் ஆண்டவருடைய காரியங்களைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் துரிதமாய் செய்கிறோம். ஆனால் கர்த்தருடைய ஆலயத்திற்கு வருவதாயிருந்தாலும், ஊழியங்களுக்காகச் செய்ய வேண்டியக் காரியங்களானாலும் காலதாமதம் செய்கிறவர்களாய் காணப்படுகிறோம். கர்த்தருடைய பிள்ளைகளே, இந்த மூன்று நபர்களைப் போல நாம் காணப்படுகிறோமா? கிரயம் செலுத்தாமல் ஆண்டவருடைய சீஷனாகக் காணப்பட முடியாது. இயேசுவின் சீஷனாவதற்கு முன்பாக அமர்ந்திருந்து  செல்லுஞ்செலவைக் கணக்குப் பாருங்கள். ஆனால் கிரயம் செலுத்தி ஆண்டவரைப் பின்பற்றும் போது,  கர்த்தருடைய வருகையில் அவரோடு கூட என்றென்றைக்கும் காணப்படுவோம். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar