சங்கீதம் 110:3 உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யௌவன ஜனம் உமக்குப் பிறக்கும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/wvAAlUPzM2E
மனிதன் மற்றவர்களுடைய தோற்றத்தை பார்க்கிறான்; ஆனால் கர்த்தரோ இருதயங்களை பார்க்கிறார். இருதயத்தில் பாவம் குடிகொள்ளும் என்று வசனம் கூறுகிறது. இந்த இருதயம் தான் திருக்கானவைகளையும் கேடுள்ளவைகளையும் சிந்திக்கிறது. மனிதனுக்கு புறம்பாக இருப்பது அவனை தீட்டுப்படுத்தாது, உள்ளே இருந்து வருவது தான் அவனை தீட்டுப்படுத்தும். ஆகையால் நாம் பரிசுத்தமான ஜீவனம் செய்வதற்கு நம்முடைய இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக்கொள்ள வேண்டும்.
கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் என்று சங் 29:2 கூறுகிறது. அதுபோல, சங் 96 :9 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள் என்று கர்த்தருடைய வசனம் கூறுகிறது.
I பேதுரு 3:3,4ல் மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது என்று பேதுரு அப்போஸ்தலன் கூறுகிறான். வண்ணம் வண்ணமாக ஆடை தரிப்பதால் வருவதல்ல அலங்காரம். ஆடை, வளையல், காதணி போன்றவைகள் அனைத்தும் ஒரே வண்ணத்தில் போடுபவைகளால் வருவதல்ல அலங்காரம். அப்படிப்பட்ட அலங்காரங்கள் அழிவுக்கு நேராக தான் இருக்கிறது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
மாறாக, பரிசுத்தமே நம் ஒவ்வொருவருடைய அலங்காரமாய் இருக்கட்டும். நம்முடைய ஆண்டவர் பரிசுத்தத்தை சிநேகிக்கிறவர். பரிசுத்தம் இல்லாத இடத்தில அவர் வாசம் செய்வதில்லை. நீங்கள் தேவனுடைய ஆலயம் என்றும், அந்த ஆலயத்தை ஒருவன் கெடுத்தால், தேவன் அதை கெடுத்துப்போடுவார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். சினிமா நட்சத்திரங்களை போல ஆடை அணிந்து தன்னை அலங்கரிக்கலாம் என்று முதலாவது கர்த்தருடைய பிள்ளைகள், சபைக்கு வருகிறவர்கள் நினைக்கக்கூடாது. காரணம் நியாயத்தீர்ப்பு கர்த்தருடைய சபையில் தான் துவங்கும்.
உலகத்திலேயே பிரசித்திபெற்ற திருமணம் உலக கோடீஸ்வரர் வீட்டில் நடைபெற்றது. அங்கே வந்தவர்களின் ஆடை அலங்காரம் ஒவ்வொன்றும் பல கோடிக்கும், பல லட்சங்களுக்கும் வாங்கியவைகள். தங்கள் சரீரத்தை அலங்கரிக்க, மனிதர்கள் செலவழிக்கும் பொருள் அதிக விலையேறப்பெற்றவைகளாய் இந்நாட்களில் காணப்படுகிறது. ஆனால் கர்த்தருடைய யௌவன ஜனம் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள் என்றே ஆவியானவர் கூறுகிறார். ஆகையால், கர்த்தரிடம் கேளுங்கள், ஆண்டவரே என்னை அலங்காரப்படுத்தும் என்பதாக. கர்த்தர் தான் ஒருவனை அலங்கரிக்க முடியும். காரணம் இயேசுவின் இரத்தம் இல்லாமல் ஒருவரும் இந்த பூவுலகில் கர்த்தருகேற்ற பரிசுத்தமும், அலங்காரமுமாய் இருக்க முடியாது. இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதே உங்கள் அலங்காரமாய் இருக்கட்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

