விசுவாசத்தின் அளவினால் வரும் அற்புதம் (The miracle that comes from the measure of faith)

மத் 9:28,29 அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/HXVaZQS0__c

உங்களுடைய விசுவாசத்தின் அளவினால் தான், நீங்கள் பெறப்போகும் அற்புதத்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டு குருடர்களிடம் ஆண்டவர் அவர்கள் அற்புதத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு முன்பாக, அவர்களுடைய விசுவாசத்தின் அளவை பரிசோதிக்கும்படி, இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். இந்த இரண்டு குருடர்களும் பார்வையடைய வேண்டுமென்று வாஞ்சித்தார்களா? ஆம் அவர்கள் வாஞ்சித்தார்கள். இந்த இரண்டு குருடர்களும் பார்வையடையும்படி இயேசு வாஞ்சித்தாரா? ஆம் இயேசுவும் வாஞ்சித்தார். இப்பொழுது குருடர்களுக்கும், இயேசுவுக்கும் அவர்கள் அற்புதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாஞ்சை இருந்தது. வாஞ்சை இருந்து விசுவாசம் இல்லாமல் போனால் அற்புதத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற சத்தியத்தை இந்த சம்பவத்திலிருந்து இயேசு நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

உதாரணத்திற்கு, இந்த இரண்டு குருடர்களில், ஒரு குருடன் இயேசுவிடம்: ஆண்டவரே, நான் இத்தனை வருடங்களும் இரண்டு கண்களில்லாமல் இருந்தேன். இப்பொழுது நீர் எனக்கு குறைந்தது ஒரு கண்ணாவது பார்வையடையும்படி செய்வீராக, ஒரு கண்ணிலிருந்து நான் பார்த்தாலே மீதமுள்ள வாழ்நாளில் எப்படியாவது பிழைத்துக்கொள்ளுவேன் என்று அவன் விசுவாசத்துடன் கேட்டால், ஆண்டவர் அந்த குருடனுக்கு ஒரு கண்ணிலிருந்து மாத்திரமே பார்வையை கொடுப்பார். மற்றொரு குருடன் இயேசுவிடம்: ஆண்டவரே, நான் இத்தனை வருடங்களும் இரண்டு கண்களில்லாமல் இருந்தேன். இப்பொழுது நீர் எனக்கு இரண்டு கண்களும் பார்வையடையும்படி செய்வீராக என்று விசுவாசத்துடன் கேட்டால், ஆண்டவர் இரண்டு கண்களும் பார்வையடையும்படி அற்புதம் செய்வார்.

இப்பொழுது இந்த சத்தியத்தை உங்கள் வாழ்வில் உபயோகப்படுத்திப்பாருங்கள். ஏதோ ஒரு காரியத்தில் உங்களுக்கு அற்புதம் வேண்டும். உங்கள் சரீரத்திலோ, உங்கள் சூழ்நிலையிலோ ஏதோ ஒரு அற்புதத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் வியாதியிலிருந்து அற்புதத்தை பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறீர்களா? ஆம் நீங்கள் நிச்சயமாகவே அற்புதத்தை பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறீர்கள். உங்கள் வியாதியிலிருந்து விடுதலையை கொடுக்க இயேசு வாஞ்சிக்கிறாரா? ஆம், இயேசுவும் நிச்சயமாகவே வாஞ்சிக்கிறார். இப்பொழுது உங்கள் விசுவாசத்தின் அளவு என்ன? பாதி அற்புதம் செய்வார் என்று விசுவாசித்தீர்களென்றால், பாதி அற்புதம் உண்டாகும். முழுமையான அற்புதம் செய்வார் என்று விசுவாசித்தீர்களென்றால், நம் ஆண்டவர் முழுமையான அற்புதத்தை செய்வார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

அதுபோல பாவத்திலிருந்து மன்னிப்பை மாத்திரம் இயேசு கொடுப்பார் என்று விசுவாசித்தால், பாவ மன்னிப்பை மாத்திரம் கொடுப்பார். அதற்கும் மேலாக, பாவ மன்னிப்பை மாத்திரமல்ல, பாவத்தை மேற்கொள்ளும் வல்லமையையும் இயேசு கொடுப்பார் என்று நீங்கள் விசுவாசித்தால், பாவத்தை மேற்கொள்ளும் வல்லமையையும் அவர் கொடுப்பார். உங்கள் விசுவாசத்தின் அளவின் படியே உங்களுக்கு காரியங்கள் கைகூடி வரும். உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். விசுவாசத்தினால் வராதது பாவம். இதுமுதல் இயேசுவின்மீது இருக்கும் விசுவாசத்தின் அளவு பெருகட்டும். அப்பொழுது உங்கள் அற்புதமும் பெருகும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org