திட்டங்களை மாற்றமாட்டார், உங்களை மாற்றுவார் (He won’t change plans, he will change you)

ரோம 11: 29. தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/ott-KRr2QyA

தேவன் ஒருவரை அவருடைய இராஜ்யத்தை கட்ட அழைத்திருப்பாரென்றால், அந்த அழைப்பில் மனிதர்கள் உறுதியாய் இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால், தேவன் அந்த அழைப்பில் உறுதியாய் இருப்பார். அவர் உங்களையும் அவர் வேலையை செய்ய அழைத்திருப்பாரென்றால், அந்த அழைப்பிலுருந்து அவர் மாறமாட்டார்.

ஆபிரகாமை பொறுத்தவரையில் அவனுக்கென்று சில மாற்று விருப்பங்களை அதாவது Optionsஐ வைத்திருந்தான். அவனுடைய Option எலியேசராக இருந்தது, அவனுடைய மற்றொரு Option இஸ்மாவேலாக இருந்தது. ஆனால் தேவன் தெரிந்துகொண்ட Option ஈசாக்காகவே இருந்தது. ஆபிரகாம் வேறொரு திட்டத்தை போட்டான். ஆனால் தேவன் ஈசாக்கு என்னும் அவர் திட்டத்திலிருந்து மாறவில்லை.

தேவன் மோசேக்கு ஒரு திட்டத்தை வைத்திருந்தார். அந்த திட்டத்திற்கு மோசே தகுதியுள்ளவனாக இல்லாதிருந்தும், அவன் ஆண்டவருடைய திட்டத்திற்கேற்ப மாறுவதற்கு, தேவன் நாற்பது வருஷங்கள் காத்திருந்தார். ஆண்டவர் நினைத்திருந்தால் நாற்பது வருஷத்திற்கு முன்பே மோசேயை விட்டு மற்றொரு தகுதிவாய்ந்தவர்களை, தன்னுடைய ஊழியத்தை செய்ய அழைத்திருக்கலாம். ஆனால் ஆண்டவர் ஒருவனை குறித்து திட்டம் கொண்டால், அவர் திட்டத்தை மாற்றாமல், அந்த நபரின் சுபாவத்தை தான் மாற்றுவார். மோசேக்கு தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற நாற்பது ஆண்டுகள் தேவன் அவனை கடினமான பாதையில் கொண்டு சென்றார்.

தேவன் யோனாவை நினிவேக்கு போய் பிரசங்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவன் தர்சீஷுக்கு கடந்துசென்றான். இருந்தாலும் ஆண்டவர் தன்னுடைய திட்டத்தை மாற்றாமல், யோனாவின் சுபாவத்தை மாற்றினார். யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றிலிருந்த பின்பு, நினிவேக்கு போய் பிரசங்கிக்க போகிறான் என்பது அவனுக்கு அப்பொழுது தெறியாது; ஆனால் ஆண்டவருக்கு எல்லாம் தெரியும். மூன்று நாட்கள் கழித்து யோனா தன்னுடைய திட்டத்தின்படி செய்வான் என்பதை நன்றாக கர்த்தர் அறிந்து வைத்திருந்தார்.

பேதுருவிடம் ஆண்டவர் சொல்லுவார், இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் இதை மேற்கொள்ளாது என்பதாக. ஆண்டவர் பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, திரளான கூட்டத்திற்கு முன்பாக இயேசுவே கர்த்தர் என்று அவன் பிரசங்கிக்கப்போகிறான் என்பது, பேதுரு இயேசுவை மறுதலித்தபோது, அப்பொழுது அவனுக்கு தெரியாது, ஆனால் இயேசுவுக்கு எல்லாம் தெரியும். ஆகையால் தான் பேதுருவின் குற்ற உணர்வை மாற்ற, இயேசு உயிர்தெழுந்தபிறகு , அவனை தனியாக போய் சந்தித்தார்.

உங்களை குறித்தும் தேவனுடைய திட்டம் மாறாது. நீங்கள் வேண்டுமானால், என்னால் முடியாது இது கடினம் என்று நினைக்கலாம். இருந்தாலும், உங்களை விட்டு ஆண்டவர் வேறு நபரை வைத்து அவர் கொண்ட திட்டத்தை நிறைவேற்றமாட்டார். உங்களை கொண்டே அவர் திட்டத்தை நிறைவேற்றுவார். காரணம், அவர் அழைத்த அழைப்பும் மாறாதவைகள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org