மனம் பதறுகிறவர்களே, பயப்படாதிருங்கள் (Fear not, you who are fearful)

ஏசா 35:4. மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/VUR2QotneMc

ஒரே வேளையில் பல இழப்புகள், பல பிரச்சனைகள், பல பாடுகள் வந்தால் நம்முடைய மனம் பதறிபோய்விடுகிறது. என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துப்போய்விடும் சூழ்நிலைக்குள்ளாக தள்ளப்பட்டுவிடுகிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இயேசுவின் மீது உங்கள் விசுவாச ஜீவியம் வர்த்திக்கும்படி இருக்கட்டும். எல்லாம் இருக்கும்போது தேவன் மீது வைக்கும் விசுவாசத்திற்கும், எல்லாம் இழந்தபிறகு, தேவன் மீது வைக்கும் விசுவாசத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு. மோசே மரித்தபின்பு யோசுவா பதறிப்போய்விட்டான். காரணம் மோசே செய்த ஊழியம் சாதாரணமான ஊழியம் அல்ல. சுமார் இருபது லட்சம் ஜனங்களை நடத்தும் மிகப்பெரிய சபையை வழிநடத்திக்கொண்டு வந்தான். இந்த இஸ்ரவேல் ஜனங்களும் சாதாரணப்பட்டவர்கள் அல்ல. அநேகமுறை முறுமுறுத்தும், மோசேக்கு விரோதமாக எழும்பியும் செயல்படுகிறவர்களாக காணப்பட்டார்கள். மிரியாம் ஆரோன் கூட மோசேக்கு விரோதமாக எழும்பினார்கள். மிகவும் கடினமான சூழ்நிலையின் மத்தியிலும், ஜெயமாக சபையை நடத்தியவர் தான் மோசே. இப்பொழுது மோசே இல்லாமல் யோசுவா மனம் பதறிப்போய்விட்டான். அப்பொழுது ஆண்டவர் சொல்லுவார், பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக (யோசு 1:6,7) என்பதாக.

ஏதோவொரு காரியத்தை இழந்து மனம் பதறிப்போய் நீங்கள் காணப்படுகிறீர்களா? வேலையை இழந்ததினால் மனம் பதறி போய் இருக்கிறீர்களா? குடும்பத்தில் நெருங்கிய நபர்களை இழந்து மனம் பதறி போய் இருக்கிறீர்களா? மற்றவர்கள் உங்களை ஏமாற்றியதால், உங்கள் சொத்துக்களை இழந்து மனம் பதறி போய் காணப்படுகிறீர்களா? கவலைபடாதிருங்கள். திடமானதாய் இருங்கள். உங்கள் தேவன் நீதியை சரிக்கடவும், உங்களுக்கு பதிலளிக்கவும் வருவார். வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும். வறண்டுபோன உங்கள் வாழ்க்கையை, இயேசு செழிப்பாக்குவார். அவர் மீது உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள். அவர் உங்களை தள்ளாடவிடமாட்டார். அடுக்கு மாடியில் குடியிருக்கும் நபர்கள், முதல் மாடியோ இல்லை அதற்கு மேலாக வசித்தாலோ, அவர்கள் வசிக்கும் தரையானது கீழே இடிந்து விழாது என்ற நம்பிக்கையில், அந்த மேல் மாடியில் குடியிருக்கிறார்கள். அதுபோல, நீங்கள் அஸ்திபாரமாகிய இயேசுவின் மீது கட்டப்பட்டிருப்பீர்களென்றால், உங்கள் வாழ்க்கையை இயேசு தாங்கி பிடிப்பவராக இருப்பார். இயேசு உங்களை இரட்சிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org