சுயநலவாதிகள் (Selfish people)

2 தீமோ 3:1-5 மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும்… இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/dXHY4CJljAc

இந்நாட்களில் சுயநலவாதிகள், வேலைஸ்தலங்களிலும், உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும், ஏன் சபைகளுக்குள்ளும் திரளாய் பெருகிவிட்டார்கள். பிறர்நலம் நோக்காமல், தன்னுடைய நலத்தை பார்க்கும் நபர்களே அநேகம். தங்களுடைய காரியம் நடக்கவேண்டும், மற்றவர்களுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்ற மனப்பான்மை தான் அநேகருடைய சுபாவமாய் காணப்படுகிறது. தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள் என்று நீதி 11:26 கூறுகிறது. வெளி உலகத்தில் தான் சுயநலவாதிகள் அதிகம் காணப்படுகிறார்களென்று பார்த்தால், சபைக்குள்ளாகவும் சுயநலவாதிகள் பெருகிவிட்டார்கள். ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன் என்று இயேசு சொன்ன வார்த்தையை சபை மறந்துபோய்விட்டது தான் சபைக்குள் சுயநலவாதிகள் பெருகிபோனதின் விளைவாய் காணப்படுகிறது.

இஸ்ரவேல் ஜனங்கள் மோசே வர தாமதத்ததினால், தங்களுக்கென்று பொன் கன்றுக்குட்டிகளை செய்துகொண்டார்கள். அதினிமித்தம், தேவனுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் மேல் கோபம் மூண்டது. ஆண்டவர் மோசேயிடம் சொல்லுவார் நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார். நாமாக இருந்தால் கர்த்தருடைய கோபம் மற்றவர்கள் மேல் பற்றியெரியட்டும் என்று சுயநலமாக இருந்திருப்போம். காரணம் கர்த்தர் நம்மை பெரிய ஜாதியாக மாற்றப்போகிறார் என்ற வாக்குத்தத்தம் கொடுத்துவிட்டார், ஆகையால் நாம் இனி நிம்மதியாக இருக்கலாம். இந்த ஜனங்கள் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன என்று நம்மில் அநேகர் நினைத்திருப்போம். ஆனால், மோசே சுயநலவாதியல்ல. அவன் சொன்னான், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான் (யாத் 32:32).

பவுல் தன்னலமில்லாமல் பிலிப்பியர் சபைக்கு சொன்னான், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை என்று தீமோத்தேயுவை குறித்து சொன்னான் (பிலி 2:20). அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது என்று பிலி 2:4,5 கூறுகிறது. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை தன்னலம் இல்லாமல் பிறர்நலம் பார்க்கவேண்டும் என்பதே. ஆகையால் நாமும் கிறிஸ்துவின் சிந்தையோடு, சுயநலவாதிகளாய் இல்லாமல் வாழுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org