உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள், தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய், திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்(ஏசா. 58:12).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/iMp0-2rRZEI
இயேசு நம்மைக் கட்டுகிறவர். நம் வாழ்க்கையையும், சபையையும், குடும்பங்களையும் கட்டுகிறவர். அவருடைய கரங்களில் நம்மைப் பூரணமாய் அர்ப்பணிக்கும் போது அவர் நம்மை அருமையாய்க் கட்டுவார். ஏதாகிலும் காரணங்களால் இடிந்து போன நிலையில் காணப்படுகிறவர்களை மீண்டும் எடுத்துக் கட்டுவார். விழுந்து போன தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் எடுத்துக் கட்டினவர், இஸ்ரவேல் என்னும் கன்னிகையே உன்னை மறுபடியும் எடுத்துக் கட்டுவேன் என்று வாக்குக் கொடுத்தவர், இடிந்து போன நிலையில் காணப்படுகிற உங்கள் வாழ்க்கையையும் மீண்டும் கட்டுவார். அவர் ஒருநாளும் குடும்பங்களிலும், சபைகளிலும் திறப்புகளை உண்டாக்குவதில்லை. அவர் திறப்புகளை அடைத்துச் சீர்படுத்துகிறவர்.
இயேசுவின் பிள்ளைகளாய் காணப்படுகிற நம்முடைய பெயர்களும் கூட, கட்டுகிறவர்கள் என்றும், மறுபடியும் கட்டுகிறவர்கள் என்றும், திறப்புகளை அடைக்கிறவர்கள் என்பதாயும் காணப்பட வேண்டும். ஆலயத்தைக் கட்டுவதற்குரிய மாதிரியைக் கர்த்தர் தாவீதிற்குக் கொடுத்தார். அவன் குமாரனாகிய சாலொமோன் ஆலயத்தைக் கட்டினான். அதின் பிரதிஷ்டையின் நாளில் கர்த்தருடைய மகிமையின் பிரசன்னம் ஆலயத்தை நிரப்பினது. கோரேஸ் பிறப்பதற்குச் சுமார் நூற்றிஐம்பது வருடங்களுக்கு முன்பாக அவனைக்குறித்து, அவன் என் மேய்ப்பன், அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும், தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று கர்த்தர் கூறினார். இவர்களை போலக் கர்த்தருடைய பிள்ளைகளாய் காணப்படுகிற நீங்களும் கட்டுகிறவர்கள் என்ற பெயரைப் பெறவேண்டும். பிசாசு இடித்துத் தள்ளுகிறவன், சிலர் அவனோடு சேர்ந்து இடிக்கிற காரியங்களைச் செய்கிறவர்களாய் காணப்படுவதுண்டு. நீங்கள் அப்படிப்பட்டவர்களாய் காணப்படலாகாது. நீங்கள் கட்டுகிறவர்களாய் காணப்படும் போது கர்த்தருக்கு பிரியமானவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்.
செருபாபேல், இடிக்கப்பட்ட ஆலயத்தை மறுபடியும் எடுத்துக் கட்டினான். முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும் அவன் கட்டின பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாய் காணப்பட்டது. இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்றும், உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்றும் கர்த்தர் வாக்குக் கொடுத்தார். அனேகர் இந்நாட்களில் இடிந்து போன நிலையில் காணப்படுகிறார்கள். வியாதிகள், பலவிதத் தேவைகள், இழப்புகள், காத்திருப்புகள் நிமித்தம் உடைந்த நிலையில் காணப்படுகிறார்கள். உங்களின் ஆறுதலின் வார்த்தைகளும், உதவிகளும் அவர்கள் வாழ்க்கையைக் கட்டும். நீங்கள் அப்படிப்பட்டவர்களாய் காணப்படும் போது, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, முத்திரை மோதிரமாக அதிகாரப்படுத்துவார்.
நெகேமியாவின் நாட்களில் பழுதாய்க் காணப்பட்ட அலங்கத்தையும், வாசல்களையும், யூதாவின் குடிகள் குடும்பம் குடும்பமாகப் பழுது பார்த்து, அதின் திறப்புகளை அடைத்துக் கட்டினார்கள் என்று நெகேமியா 3வது அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அலங்கத்தின் பிரதிஷ்டையின் நாளில் காத்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கினார். அவர்களுடைய மகிழ்ச்சியின் களிப்பு தூரத்தில் கேட்கும் படிக்குச் செய்தார். கர்த்தருடைய பிள்ளைகள் திறப்புகளைப் பார்க்கும் போது அதை அடைக்கிறவர்களாய் காணப்படுங்கள். சபைகளிலும், தேசங்களிலும், மற்றவர்களுடைய ஜீவியங்களிலும் திறப்புகள் தென்படும் போது உடனடியாய் அதை அடைப்பதற்று முயற்சி செய்யுங்கள். நீங்கள் அப்படிச் செய்யும் போது, கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கட்டளையிடுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

