சாக்கு சொல்லாதிருங்கள் (Make No Excuses) 

அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன், சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்(ஏரே. 1:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CdQjGNK_Puk

எரேமியாவை கர்த்தர் ஒரு நோக்கத்தோடு தெரிந்து எடுத்தார். அவன் தாயின் வயிற்றில் உருவாகு முன்னே அவனை அறிந்தார். அவன் கர்ப்பத்திலிருந்து வெளிப்படு முன்னே அவனைப் பரிசுத்தப்படுத்தி, ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டார். அப்போஸ்தலனாகிய பவுலும் கூட, நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் என்னைத் தேவன் அழைத்தார் என்று கலாத். 1:15ல் கூறினார். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஒரு நோக்கத்தோடு தெரிந்தெடுத்திருக்கிறார். நீங்கள் கர்த்தருடைய கண்களில் கடாட்சம் பெற்றவர்கள்.  உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து எடுத்தது அவருடைய கிருபை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  அந்தக் கிருபைக்குப்  பாத்திரவான்களாய் காணப்படுங்கள்.

எரேமியாவின் தகப்பன் இல்க்கியா லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆசாரியன். கர்த்தர் எரேமியாவை அவன் தகப்பனைப் போல ஆசாரியனாய் தெரிந்தெடுக்காமல் தீர்க்கதரிசியாகத் தெரிந்தெடுத்தார். ஆசாரியன் பிரமாணத்தில் எழுதப்பட்டபடி ஆசாரிய ஊழியம் செய்தால் போதும், ஆனால் தீர்க்கதரிசி என்பவன் கர்த்தருடைய வாயாய் காணப்பட்டு அவர் சொல்லுகிற காரியங்களை ஜனங்களுக்குச் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட உன்னத அழைப்பைப்   பெற்றவேளையில், அவன் ஆண்டவரைப் பார்த்து, இதோ, நான் பேச அறியேன், சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்று சாக்கு கூறினான். அவன் இவ்வண்ணமாகக் கூறின போது அவனுடைய வயது பதினேழிலிருந்து  இருபது வயதிற்குள் இருக்கக்கூடும். அவன் சிறுபிள்ளையல்ல, அவனுடைய இயலாமையை, அனுபவமின்மையை வெளிப்படுத்தினான். அப்போது கர்த்தர்,   சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே என்றார். 

ஆண்டவர் இளைஞனாய் காணப்பட்ட யோசேப்பை  பயன்படுத்தினார், தாவீது இளவயதிலேயே கர்த்தரை சேவிக்கிறவனாய் காணப்பட்டான். தானியேலும் அவன் நண்பர்களும் இளவயதிலேயே சாட்சியாய் வாழ்ந்தார்கள். யோவான் ஸ்நானகன் தாயின் கர்ப்பத்தில் காணப்பட்ட வேளையிலேயே கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டு,   பயன்படுத்தப்பட்டான். தீமோத்தேயு இளைஞனாய் காணப்பட்ட வேளையில் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டான்.   ஆண்டவரால் யாரையும் பயன்படுத்தக் கூடும். கர்த்தர் எரேமியாவைப் பார்த்து, நான் உன்னோடு கூட இருக்கிறேன், என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன் என்று கூறினார், அன்றிலிருந்து அவன் கர்த்தருடைய வாயாய் காணப்பட்டு, தேசம் அறிகிற தீர்க்கதரிசியாய் காணப்பட்டான்.  கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் ஆண்டவரை எந்த வயதிலும் சேவிக்கலாம். சிறுவர்கள், இளைஞர்கள், அனுபவமில்லாதவர்கள் என்று சாக்குச் சொல்லி ஒதுங்கிக் கொள்ளாதிருங்கள். நீங்கள் கர்த்தருக்கு வேண்டும். உங்கள் வாழ்க்கையை அவருடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கும் போது அவர் உங்களோடு கூட இருந்து, உங்களை மகிமையாய் பயன்படுத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae