தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்(I will make your land prosperous again)

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன் (2 நாளாகமம் 7:14).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/kw-D1wCHy24

சாலொமோன் ஆயிரம் பலிகளைச் செலுத்தி கிபியோனில் கர்த்தரைத் தொழுதுகொண்ட வேளையில் கர்த்தர் தரிசனத்தில் தோன்றி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தன் ராஜரீகத்திற்கு ஒரு அரமனையையும் கட்ட நினைத்தான், கர்த்தர் அதைக் கைகூடி வரப்பண்ணினார். சுமார் இருபது வருடங்கள் கழித்து ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்யும் நாட்கள் வந்த வேளையில், சாலோமோன் நீண்ட ஜெபத்தை ஏறெடுத்து, இருபத்தீராயிரம் மாடுகளையும், லட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டு, ராஜாவும் சகல ஜனங்களும் சேர்ந்து தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணினார்கள். அப்போது கர்த்தர் இரண்டாம் விசை தரிசனத்தில் தன்னை வெளிப்படுத்தி, கொடுத்த வாக்குத்தத்தமாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது.

கர்த்தருடைய பிள்ளைகள் அத்தனை பேரும் அவருடைய நாமம் தரிக்கப்பட்ட ஜனங்களாய் காணப்படுகிறோம். எரேமியா தீர்க்கத்தரிசி, சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது (எரே. 15:16, 14:9) என்று கூறினார். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும் (வெளி. 22:4). இயேசுவின் நாமத்தைத் தரித்த ஜனங்கள் என்பது கர்த்தர் நமக்குக் கொடுத்த பெரிய பாக்கியமாகக் காணப்படுகிறது. உலகத்தில் காணப்படுகிற எல்லா ஜனங்களுடைய பிரச்சனைகளுக்கும் பதில் கர்த்தருடைய நாமம் தரிக்கப்பட்ட ஜனங்களின் கரங்களில் காணப்படுகிறது. ஆனால் நாம் கர்த்தருடைய சமூகத்தில் நம்மைத் தாழ்த்துகிறவர்களாய் காணப்படவேண்டும். கர்த்தர் பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் வாசம்பண்ணுகிறவர். அவர் பெருமையையும், அகந்தையையும வெறுக்கிறவர். தாழ்த்துவது என்பது கிறிஸ்துவின் சுபாவமாய் காணப்படுகிறது, அதே சிந்தையைத் தரித்தவர்களாய் கர்த்தருடைய பிள்ளைகள் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச்  சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,  தம்மைத்தாமே  வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார். மேன்மைக்கு முன்னானது தாழ்மையாய் காணப்படுகிறது.

கர்த்தருடைய ஜனங்கள் நம்மைத் தாழ்த்தி, ஜெபம் பண்ண வேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகிறார். ஆயக்காரன் தூரத்தில் நின்று தன்னைத் தாழ்த்தி பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்த வேளையில், அவனுடைய ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். நினிவேயின் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி ஜெபித்த வேளையில் கர்த்தர் அழிவிலிருந்து அவர்களை தப்புவித்தார். நம்மைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, அவருடைய முகத்தைத் தேடும் போது, அவர் தம்முடைய முகத்தை நமக்கு மறைப்பதில்லை. என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று (சங். 27:8), என்ற சங்கீதக்காரனைப் போலக் கர்த்தருடைய முகத்தைத் தேடுகிறவர்களாய் நாம் காணப்பட வேண்டும். அதோடு நம்முடைய பொல்லாத வழிகளையும் விட்டு விலக வேண்டும். நம்முடைய அக்கிரமங்களே கர்த்தருடைய முகத்தை நமக்கு மறைக்கிறது. நம்முடைய இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தால், ஆண்டவர் நமக்குச் செவிகொடார். நம்முடைய பொல்லாத வழிகளையும், அக்கிரம சிந்தைகளையும் விட்டு நாம் விலகும்போது, பரலோகத்திலிருக்கிற தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்பார். அவருடைய நாமங்களில் ஒன்று ஜெபத்தைக் கேட்கிறவர். ஜெபங்களைக் கேட்டு, நம்முடைய பாவங்களை மன்னிப்பார். ஜெபக்குறைவு பாவமாய் காணப்படுகிறது. நாம் இடைவிடாமல் ஜெபிக்கும்  போது, கர்த்தர் நமமுடைய தேசத்தை ஆசீர்வதிப்பார், தேசத்தின் குடிகளை அழிவிலிருந்து தப்புவித்து, அவர்களை ஆசீர்வதிப்பார், இழந்து போன நற்சீரைத் தேசம் மீண்டும் பெறும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar