ஜெப வீட்டில் தான் மகிழ்ச்சி (Joyful is in the house of prayer)

ஏசாயா 56:7 நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/nqogSncLKFc

எங்கே மகிழ்ச்சி கிடைக்கும் என்று தேடிக்கொண்டும் நாடிக்கொண்டும் இருக்கும் கோடிக்கணக்கான ஜனங்கள் தேசங்களில் காணப்படுகிறார்கள். விவசாயம் வேலை செய்கிறவர்கள், பொறியியல் வேலை செய்கிறவர்கள், மென்பொருள் பணியாளர்கள், மருத்துவர்கள், பல தொழில் செய்கிறவர்கள் என்று உலகத்திலிருக்கும் அணைத்துவைகயான ஜனங்களும் எங்கே மகிழ்ச்சி கிடைக்கும் என்றே தேடுகிறார்கள். வேலைஸ்தலத்தில் ஏற்படும் பல நெருக்கடிகளினிமித்தம், நண்பர்களிடம் உல்லாசமாக சுற்றுலா சென்று குதூகலிக்க செல்லும் திரளான ஜனங்கள் பல நிறுவனங்களிலிருந்து கடந்து செல்கிறார்கள். இவர்களுக்கு தரும் மகிழ்ச்சி போதைப்பொருள்களும் மற்றும் புகையிலைகளும் மாத்திரமே. இவைகள் தரும் தற்காலிக போதைகள் மகிழ்ச்சி என்று பெரிய பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் வேலையாட்கள் கருதுகிறார்கள்.

சிலருக்கு உறவினர்கள் வீட்டிற்கு சென்று வருவது தான் மகிழ்ச்சியை தருகிறது என்று நினைத்துக்கொள்ளுகிறார்கள். இதுவும் ஏமாற்றத்திலே முடிந்துவிடுகிறது. சிலர், மனம் சந்தோசமாகவும் கவலையற்றிருக்கவும் யோகா போன்ற காரியங்களை கற்க பல மணிநேரங்களை செலவிடுகிறார்கள். இதுவும் மாயையாகவே காணப்படுகிறது. மகிழ்ச்சியை தேடி பல மணி நேரங்கள் வீணான சினிமாக்களையும், நாடகங்களையும் பார்த்து, பல மணிநேரங்கள் சினிமா பாடல்களை கேட்டும் தங்கள் நேரத்தை வீணாக்குகிற கோடிக்கணக்கான ஜனங்களும் உண்டு.

இப்படிப்பட்ட ஜனங்கள் நடுவில் வாழும் கர்த்தருடைய பிள்ளைகளே, நமக்கு மகிழ்ச்சி, கர்த்தருடைய ஜெப வீடு மாத்திரமே என்பதை தேவ ஜனங்கள் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஜெப வீடு என்பது நாம் கூடிவருகிற கர்த்தருடைய சபையாக காணப்படுகிறது. அங்கே தான் நமக்கு நித்திய மகிழ்ச்சியும், நித்திய பேரின்பமும் கிடைக்கிறது. இதை தான் தாவீதும் கூட மகிழ்ச்சியோடு சொல்லுகிறான், கர்த்தருடைய வீட்டில் நிலைத்திருப்பதையே நான் வாஞ்சிக்கிறேன் என்பதாக.

ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் எங்கே சென்றாலும் வந்தாலும் உலகத்து ஜனங்கள் காட்டும் மகிழ்ச்சியை தேடி ஓடுகிறவர்களாக காணப்படலாகாது. அப்படிப்பட்டவர்கள் நடுவில் நாம் வாசம் செய்தாலும், நாம் நம்முடைய மகிழ்ச்சியை கர்த்தருடைய ஜெப வீட்டில் இருப்பதால் தான் வருகிறது என்பதை சாட்சியாய் காண்பிக்க வேண்டும். காரணம் நாம் தான் உலகத்திற்கு வெளிச்சமாகவும், பூமிக்கு சாட்சியாகவும் காணப்படுகிறோம்.

முக்கியமான திருமணம், முக்கியமான கூடுகை, முக்கியமான சந்திப்பு என்று எதுவும் கர்த்தருடைய ஜெப வீட்டிற்கு போவதை தடுக்காமல் உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள். காரணம், கர்த்தருடைய ஜெப வீடு மாத்திரமே உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org