எரே 23:31. இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Eub-7JwvN-0
கர்த்தருடைய ஊழியம் செய்கிறவர்களை போல தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் கள்ள தீர்க்கதரிசிகளும், கள்ள ஊழியக்காரர்களும் கர்த்தருக்கு விரோதி என்பதை எரேமியா 23:30-32 வசனங்களில் அடுத்தடுத்து மூன்று வசனங்களில் கர்த்தர் குறிப்பிட்டு சொல்லுகிறார். இந்த அதிகாரத்தின் துவக்கமே என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றே ஆரம்பிக்கிறது.
இன்று அநேக சபைகளில் மேய்ப்பர்கள் தங்கள் சுய கருத்துக்களையே சொல்லி, சபை ஜனங்களை சத்தியத்திற்கு மாறாக வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு ஊழியக்காரர், சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக வருகிற தன்னுடைய பெரிய சபையில் சொன்னார், மூழ்கி ஞானஸ்நானம் எடுக்க தேவையில்லை, காரணம் உடம்பில் அழுக்கு உள்ளவர்கள் தான் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும், அழுக்கு இல்லாதவர்கள் தெளிப்பு ஞானஸ்நானம் எடுத்தால் போதும் என்று சொன்னார். இப்படி சத்தியத்தை புரட்டுகிற மேய்ப்பர்களுக்கு தான் ஐயோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மற்றொரு ஊழியக்காரர் சொன்னார், சினிமா பார்ப்பது நல்லது. அதில் ஆபாசமாக வரும் காரியங்களை மாத்திரம் Forward செய்து மீதமுள்ள சினிமாவை பார்க்கலாம் என்று சொன்னார். இப்படிப்பட்ட பொல்லாத ஊழியக்காரர்கள் திரளான ஆடுகளை, சபை ஜனங்களை வஞ்சித்து தவறான பாதையில் நடத்துகிறார்கள். ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன் என்று மல் 2:7ல் எழுதப்பட்டபடி ஆசாரியனின் உதடுகளிலிருந்து வேதவசனங்கள் சத்தியங்கள் மாத்திரமே வரவேண்டும். ஆனால், திரளான சபைகளில் ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள் தங்கள் சொந்த சொப்பனங்களையும், சிந்தனைகளையும் யூகித்து ஜனங்களை வஞ்சிக்கிறார்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிப்பட்ட கள்ள ஊழியர்களுக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று கொரிந்து, கொலோசிய போன்ற சபைகளுக்கு நிருபங்களை எழுதுகிறவனாய் காணப்பட்டான். கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும் என்று 2 கொரி 11:13-15ல் பவுல் குறிப்பிடுகிறார்.
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று தமிழில் சொல்லுவார்கள். அதுபோல சபையில் வசனத்தை அறியாமல், வேதத்தை வாசிக்காமல் இருக்கும் ஜனங்கள் இருக்கும் வரை, வேதத்துக்கு புறம்பாக பேசும் கள்ள ஊழியர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆகையால் கர்த்தர் விரோதி என்று அழைக்கும் கள்ள ஊழியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் உங்களை தற்காத்துக்கொள்ள, உங்கள் வேத தியானத்தை கூட்டுங்கள், நீங்கள் வேதத்தை நன்றாக பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வாசியுங்கள். அப்பொழுது நீங்கள் வஞ்சிக்கப்படாமல் இருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

