ஆண்டவருக்கு முதுகையல்ல, முகத்தைக் காட்டுங்கள் (Turn your faces to God, not your backs)

முகத்தையல்ல, முதுகை எனக்குக் காட்டினார்கள், நான் ஏற்கனவே அவர்களுக்கு உபதேசித்தும் அவர்கள் புத்தியை ஏற்றுக்கொள்ளச்  செவிகொடாமற்போனார்கள் (எரே. 32:33).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/eVbxPHH7b-0

யூதாவின் குடிகள் ஆண்டவருக்குத் தங்கள் முகத்தைக் காட்டுவதற்குப் பதிலாக முதுகைக் காட்டினார்கள். அவர்களை எரேமியா தீர்க்கதரிசி மூலம் கர்த்தர்   பலமுறை எச்சரித்த பின்பும், திரும்புவதற்கு மனதில்லாமல், கள்ளத்தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நம்பி சோரம் போனார்கள். ஆகையால் அவர்களைப்   பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் அடிமைத்தனத்திற்கு விற்றுப் போட்டார். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் உங்கள் முகத்தைக் கர்த்தருக்கு நேராகத் திருப்பி, அவரைத் தேடுங்கள்.  இது கர்த்தரைத் தேடுகிற காலம். அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிற நாட்களாய் காணப்படுகிறது. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று கர்த்தர் பரலோகத்திலிருந்து  மனுப்புத்திரரை கண்ணோக்கி பார்க்கிறார். 

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் நாட்களில் யூதாவின் ஜனங்களில் ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர்கள், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பி; கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள் என்று எசே.8:16 கூறுகிறது. அவர்களைப் போல இந்நாட்களிலும் காணப்படுகிற கர்த்தருடைய ஜனம் என்று கூறுகிறவர்களில் அனேகர் தேவனுக்கும் அவருடைய ஆலயத்திற்கும் தங்கள் முதுகைக் காட்டுகிறவர்களாய் காணப்படுகிறார்கள். ஆலயத்தைக் குறித்தும் ஆண்டவருடைய சமூகத்தைக் குறித்தும் வாஞ்சையில்லை, நேரத்திற்கு ஆலயத்திற்கு வந்து ஆண்டவரைத் தேட வேண்டும் என்ற ஆசையில்லை. ஆவிக்குரிய காரியங்களிலும் ஜெபக்கூட்டங்களிலும் நாட்டமில்லை, வசனத்தில் வளரவேண்டும் என்ற தாகமில்லை, கர்த்தருடைய வருகையைக் குறித்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லை. ஆனால் தங்களுடைய முகத்தை வேறுபல காரியங்களுக்கு நேராகத் திருப்புகிறார்கள். உலகத்தின் கவர்ச்சிகளுக்கும், சத்துருவின் நயங்காட்டுதலுக்கும் தங்களை விற்றுப் போடுகிறார்கள். ஆகையால் உங்கள்  ஆபத்தின் நாளிலே என் முகத்தையல்ல, என் முதுகை உங்களுக்குக் காட்டுவேன் என்று   கர்த்தர் எரே. 18:17ல் கூறுகிறார்.   ஆபத்து வேளைகளில் ஆண்டவரை நோக்கி முறையிடுகிறோம். உதவிகள் கிடைக்காத போது முறுமுறுக்கிறோம். ஆனால் அதுவரை ஆண்டவருக்கு முகத்தைக் காட்டி அவரைத் தேடியிருக்கிறோமா என்றால் அது கேள்விக்குறியாய் காணப்படுகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் உங்கள் முகத்தை ஆண்டவருக்கு நேராகத் திருப்பி, அவருடைய முகத்தைத் தேடும் போது கர்த்தர் உங்கள் வாழ்க்கையைப் பிரகாசிக்கப் பண்ணுவார். என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று என்ற சங்கீதக்காரனைப் போல அவருடைய முகத்தைத் தேடுங்கள். அப்போது உங்கள் முகங்கள் ஒருநாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை. கர்த்தர் கிருபையையும் சமாதானத்தையும் உங்கள் வாழ்க்கையில் கட்டளையிட்டு உங்களை ஆசீர்வதிப்பார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae