சஞ்சலம் நீங்கும், சந்தோசம் வரும் (Sorrow will go away, happiness will come)

எரே 31:13. அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/khAR7xHN7pg

உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் நிறைவேற்றப்போகும் ஒரு வாக்குத்தத்தம் தான் மேற்குறிப்பிட்ட வசனமாய் காணப்படுகிறது. நம்முடைய ஆண்டவருக்கு மாராவை மதுரமாக மாற்றுவதும், குறைவுபட்ட திராட்சைரசத்தை மதுரமான திராட்சைரசமாக மாற்றுவதும் இயல்பான காரியமும், அவருக்கு இலேசான காரியமுமாய் இருக்கிறது. கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார் (ஏசா 25:8).

சிறையிருப்பில் இருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எத்தனையோ சஞ்சலமும் தவிப்பும் காணப்பட்டது. சொந்த வீட்டை விட்டு யாரவது நம்மை துரத்தினால், நம்முடைய தவிப்பும் சஞ்சலமும் எவ்வளவாய் காணப்படும்? இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சொந்த தேசத்தை விட்டு பாபிலோனுக்கு சிறையாக கொண்டு போகப்பட்டபோது, அவர்களின் அழுகையும் தவிப்பும் எவ்வளவாய் இருந்திருக்கும் என்று சற்று சிந்தித்துப்பாருங்கள். அப்படிப்பட்ட கடினமான பாதையில் நாம் ஒருவரும் கடந்து சென்றிருக்க வாய்ப்பே இல்லை. அப்படி கடினமான பாதையில் சென்ற அவர்களுக்கே, துக்கத்தை சந்தோசமாக மாற்றுவதும், அவர்கள் வாழ்க்கையிலிருந்த சஞ்சலத்தை நீக்கி சந்தோசத்தை தேவன் கொண்டுவந்தாரென்றால், உங்கள் துக்கத்தை மாற்றவும் உங்கள் சஞ்சலத்தை நீக்கவும் தேவனால் எவ்வளவு இலேசாக கூடும்.

அவர்களுடைய சஞ்சலத்தை நீக்கி சந்தோசத்தை கொடுத்தவர், உங்கள் வாழ்க்கையிலும் சஞ்சலமும் தவிப்பும் நீக்கி சந்தோஷமடையும்படி கர்த்தர் செய்வார். உங்களை ஆறுதல் படுத்துகிற தேவன் ஒருவர் உண்டு. நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் சிறையிருப்பின் நாட்கள் முடிந்துபோகும். துக்கத்தை கண்ட நாட்களுக்கு சரியாய் உங்களை மகிழச்செய்வார்.

கடினமே இல்லாமல் ஒரு ஆசீர்வாதம் வரும் என்றால், அந்த ஆசீர்வாதத்தின் ஆழத்தையும் அர்த்தத்தையும் நீங்கள் அறியாமலும் உணராமலும் போய்விட வாய்ப்பு உண்டு. ஆனால் கடினமான பாதையில் கடந்து சென்று ஆண்டவருடைய ஆசீர்வாதத்தை சுதந்திருக்கும்போது, அவருடைய ஆசீர்வத்தின் மேன்மையை நன்றாக விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால் கடினமான சஞ்சலமான பாதையில் கடந்துசெல்கிறேன் என்று கவலைபடாதிருங்கள். காகத்தை கவனித்து பாருங்கள். ஆண்டவர் அவைகளையும் பிழைப்பூட்டுகிறார். காட்டு புஸ்பங்களை கவனித்துப்பாருங்கள். யாரும் அதை கவனிக்கவிட்டாலும், ஆண்டவர் அவைகளை கவனிக்கிறார். காட்டிலுள்ள மிருகங்கள், கடலில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள், வானத்தில் பறக்கும் பறவைகள், இவைகளையெல்லாம் ஆண்டவர் பிழைப்பூட்டுகிறாரென்றால், உங்களை பிழைப்பூட்டுவது எவ்வளவு நிச்சயம். ஆகையால் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கிற வாக்குத்தத்தம், வரும் காலங்களில் உங்கள் சஞ்சலத்தை நீக்குவேன், அதற்கு பதிலாக சந்தோசத்தை தருவேன் என்று சொல்லுகிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org