கெஞ்சுதலுக்கு இரங்கும் தேவன்(God is merciful to our supplication).

உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி,  நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும் படிக்கு,  அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான் (யாத். 32:13).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/tAFdEi861I0

நம்முடைய தேவன் கெஞ்சுதலுக்கு இரங்குகிறவர். தாவீது கர்த்தரை நோக்கிக் கெஞ்சி,  சத்தத்தை உயர்த்தின வேளையில் கர்த்தர் அவன் விண்ணப்பத்தின் சத்தத்தைக் கேட்டார்(சங்.77:1). அதுபோல யாக்கோபும் போராடி,  அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்(ஓசியா 12:4),  அந்த வேளையில்,  கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். கெஞ்சுதலின் ஜெபம் கர்த்தரின் இருதயத்திலிருந்து இரக்கத்தைக் கொண்டுவருகிறது.

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு,  சீன் வனாந்தரத்திலுள்ள சீனாய் மலையடிவாரத்தில்,  கர்த்தரை ஆராதிக்கும் படிக்கு,  பாளையம் இறங்கினார்கள். மோசே கர்த்தரிடத்திலிருந்து பிரமாணங்களைப் பெற்றுக் கொள்ளும்படியாக சீனாய் மலையுச்சிக்கு ஏறிச்சென்றான். தேவன் தன்னுடைய விரலினால் எழுதின இரண்டு சாட்சியின் பிரமாணங்களை மோசேயிடம் கொடுத்தார். மோசே நாற்பது நாட்கள் மலையுச்சியில் காணப்பட்டதினால்,  கீழ்காணப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள்,  அவனுக்கு ஏதோ சம்பவித்தது என்று கருதி,  தங்களுக்கு முன் கடந்து செல்ல தெய்வங்களை உண்டாக்கும் படிக்கு ஆரோனை நெருக்கினார்கள். ஆரோன் அவர்கள் கரங்களில் காணப்பட்ட பொன்னை வாங்கி,  சிற்பக்கருவியினால் செதுக்கி,  ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அதன்பின்பு பலிபீடத்தைக் கட்டி,  கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறி,  சர்வாங்க தகனபலிகளையும்,  சமாதான பலிகளையும் செலுத்தினார்கள். ஜனங்கள் புசிக்கவும்,  குடிக்கவும்,  உட்கார்ந்து விளையாடவும் செய்து தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள். கர்த்தருடைய கோபம் அவர்கள் மேல் மூண்டது,  கர்த்தர் அவர்களை அழித்துப்போட்டு,  மோசேயை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்களித்தார். அப்பொழுது மோசே ஜனங்களுக்காக,  கர்த்தருடைய இரக்கம் வெளிப்படுவதற்காகக் கெஞ்சிப் பிரார்த்தித்தான். அந்த வேளையில் கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்காகச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு பரிதாபம் கொண்டார்.

ஜனங்களுடைய பாவங்களும்,  அக்கிரமும்,  மீறுதல்களும் தான்,  யுத்தங்களையும், அழிவுகளையும், நோய்களையும்,  பஞ்சங்களையும் கொண்டு வருகிறது. ஆகையால் கர்த்தருடைய இரக்கம் வெளிப்படுவதற்காகத் தேவனுடைய நாமத்தை அறிந்த நாம்,  இந்த நாட்களில் நம்மைத் தாழ்த்தி,  கெஞ்சி ஜெபிக்க வேண்டும். அப்பொழுது,  கர்த்தர் ஜனங்களுக்காக இரக்கம் கொள்வார். என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி,  ஜெபம் பண்ணி,  என் முகத்தைத் தேடி,  தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால்,  அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு,  அவர்கள் பாவத்தை மன்னித்து,  அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன் (2 நாளா. 7:14),  என்று வாக்களித்தவர், தேசத்தின் குடிகளை நினைத்தருளி விடுதலையளிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org