இயேசு உங்களுக்கு தூரமானவரல்ல (Jesus is not far from you).

கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார், அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே (அப். 17:27)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vCOJQ3OCp7E

இயேசு எல்லா ஜனங்களுக்கும்  மிகவும் சமீபமாய் காணப்படுகிறார். அவரை அறிந்தவர்கள், அறியாதவர்கள் யாவருக்கும் அவர் அருகில் காணப்படுகிறவர். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார் என்று சங். 145:18 கூறுகிறது. ஆகையால் ஆண்டவரை ஏற்கனவே அறிந்தவர்கள் இன்னும் அவரை அண்டிக் கொள்ளுங்கள், சங்கீதக்காரனைப் போல நமக்கு அவரை அண்டிக்கொள்ளுவதே நலமாய் காணப்படுகிறது. மற்றவர்கள் இது இயேசுவை நோக்கிக் கூப்பிடுகிற காலம் என்பதை உணர்ந்து, அனுக்கிரகக் காலத்தில் செவிகொடுப்பேன் என்று வாக்களித்த தேவனை அண்டிக்கொண்டு, அவருக்கு நேராய் உங்கள் முகத்தைத் திருப்பி, அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

சகேயு என்று ஒரு மனிதன் காணப்பட்டான். பிறப்பின் படி அவன் யூதனாய் காணப்பட்டாலும், அவர்களுடைய நியாயப்பிரமாணத்திற்கு ஒவ்வாத வாழ்க்கை வாழ்ந்தான். அவன் யூதர்களை அந்நாட்களில் அடிமைப் படுத்தி வைத்திருந்த ரோமர்களுக்கு, வரி வசூலிப்பவனாகக் காணப்பட்டான். அதுவும் சொந்த ஜனங்களிடத்திலிருந்தும், வாங்க வேண்டிய வரிக்கு அதிகமாக வாங்கி, அநியாயம் செய்கிறவனாய் காணப்பட்டான்.  ஆகையால் யூத ஜனங்கள் அவனைத் தேசத்துரோகியாகக் கருதினார்கள். ஒருநாள் இயேசு எரிகோவின் வீதிகளின் வழியாக வருகிறார் என்று கேள்விப்பட்டு அவர் எப்படிப்பட்டவரோ என்று பார்க்க ஆசைப்பட்டான். அவன் குள்ளனாய் காணப்பட்ட படியினால் ஒரு காட்டத்தி மரத்தின் மேல் ஏறி அவரைப் பார்க்கும் படிக்கு அமர்ந்து கொண்டான். இயேசு எல்லாவற்றையும் அறிந்தவர், அவர் மரத்தின் கீழ் வந்த உடன் நின்று, அண்ணாந்து பார்த்து, சகேயுவே சீக்கிரம் இறங்கி வா, நான் இன்று உன் வீட்டில் தங்கவேண்டும் என்று கூறினார். அவன் கீழே இறங்கி சந்தோஷத்தோடு அவரை தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றான். அன்றைய தினமே அவனுக்கும் அவன் வீட்டிற்கும் இரட்சிப்பு வந்தது. அவனுடைய வாழ்க்கையும் மாறினது. இயேசு தன்னைத் தேடினவனுக்குத் தன்னை வெளிப்படுத்தி, நான் உனக்குத் தூரமானவரல்ல, என்பதை விளங்கச் செய்தார். 

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் இயேசு உங்கள் அருகில் இருக்கிறவர். உங்கள் மகிழ்ச்சியின் வேளைகளிலும், துக்க நேரங்களிலும் உங்களோடு அவர் காணப்படுவார். உங்கள் ஆபத்து வேளையில் மிகவும் அருகில் காணப்படுகிற அனுகூலமான துணையாய் காணப்படுவார்.  நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேரே பெரிய ஜாதி எது? என்று  உபா. 4:7 கூறுகிறது. நீங்கள் ஆலயத்தில் வந்து ஆவியோடும் உண்மையோடும் அவரை நீங்கள் தொழுது கொள்ளும் போது அவர் உங்களுக்கு மிகவும் சமீபமாய் காணப்படுவார்.  ஆகையால் ஆண்டவரை அண்டிக் கொள்ளுங்கள், ஒருநாளும் அவரை விட்டு தூரம் போய்விடாதிருங்கள். அவருக்குப் பிரியமான வாழ்க்கை நீங்கள் வாழும் போது, இம்மானுவேலாய் அவர் எப்போதும் உங்களோடிருப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae