எதுவரைக்கும் ஆண்டவரே! (O Lord, How long)

கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்,நீர் இரட்சியாமலிருக்கிறீரே! ஆபகூக் 1:2

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/71eDkbiexaI

ஆபகூக் தீர்க்கதரிசி யூதா ஜனங்களுடைய ஆவிக்குரிய எழுச்சியையும், வீழ்ச்சியையும் கண்டவர். யோசியா ராஜா தன்னுடைய 8வது வயதில் யூதாவின் மேல் ராஜாவாகிப் பல ஆவிக்குரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அவருடைய ஆட்சியின் நாட்களில் யூதா தேசத்தில் எழுப்புதல் காணப்பட்டது. ஆனால் யோசியாவிற்கு பின்பு தோன்றின நான்கு ராஜாக்களாகிய யோவகாஸ், எலியாக்கீம்,யோகாக்கீம் மற்றும் சிதேக்கியாவின் நாட்களில் தேசம் கர்த்தரை விட்டு சோரம் போனது. ஆகையால் ஆவிக்குரிய வீழ்ச்சி தேசத்தின் குடிகளுக்குள் வந்தது. ஒரு நபரின் மூலம் தேசத்தில் எழுப்புதல் வரமுடியும்,இன்னொருவர் மூலம் எழுப்புதல் தீயை அவித்துப்போடவும் கூடும். கர்த்தருடைய பிள்ளைகள் எழுப்புதல் அக்கினியைப் பற்றிப்பரவச் செய்கிற பாத்திரங்களாய் காணப்படுகிறோமா அல்லது அவித்துப்போடுகிறவர்களாய் இருக்கிறோமா,என்று நம்மை சோதித்தறிகிறவர்களாய் காணப்படவேண்டும்.

யூதாவின் கடைசி நான்கு ராஜாக்களுடைய பாதகங்களினிமித்தம் தேசத்தில் கொடுமையும்,அக்கிரமும்,தீவினையும்,கொள்ளையும்,வாதையும் பெருகினது,அந்தவேளையில்,ஆபகூக் ஆண்டவரை நோக்கி எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்,நீர் கேளாமலிருப்பீர் என்று தன்னுடைய ஜெபம் கேளாமலிருப்பதைக் குறித்துக் கலங்குவதைப் பார்க்கமுடிகிறது. அடுத்ததாக,தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே,அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே, பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? (ஆபகூக். 1:13),என்று அடுத்த கேள்வியை எழுப்புகிறார். கர்த்தருடைய பிள்ளைகளே,அனேக வேளைகளில் நாமும் ஆண்டவரை நோக்கிப் பல கேள்விகளைக் கேட்கிறோம். ஏன் ஆண்டவரே கொள்ளை நோய்,ஏன் மனுகுலத்திற்கு இந்த வேதனை,ஏன் ஜனங்கள் இவ்வளவாய் நெருக்கப்படுகிறார்கள்,ஏன் இத்தனை மரணங்கள்,உம்முடைய அன்பும் மனதுருக்கமும் எங்கே,ஏன் எங்களை மறந்தீர் என்று பல கேள்விகளைக் கேட்பதுண்டு. 

ஆபகூக் பல கேள்விகளைக் கேட்டபின்பு, நான் என் காவலிலே தரித்து,அரணிலே நிலைகொண்டிருந்து,அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்று கவனித்துப் பார்ப்பேன் (ஆபகூக் 3:1) என்றார். சில வேளைகளில் நாம் ஆண்டவரிடத்தில் கேள்விகள் கேட்டபின்பு அவருடைய பதிலுக்காகக் காத்திருப்பதும்,கவனித்திருப்பதும் இல்லை. நம்முடைய தேவன் பேசுகிறவர். அவர் ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஜெபங்களுக்கும் பதில் தருகிறவர் என்பதை மறந்து போகாதிருங்கள். தேவாதி தேவன் ஆபகூக்கின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கொடுத்த வேளையில், ஆபகூக் காரியங்களைப் புரிந்துகொண்டு,கர்த்தாவே,நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன்,எனக்குப் பயமுண்டாயிற்று(ஆபகூக் 3:2) என்றும், நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று, அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது, என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று, என் நிலையிலே நடுங்கினேன் (ஆபகூக் 3:16) என்றும் கூறினார். தேவன் தேசத்தில் அனுமதிக்கிற ஒவ்வொரு தீமைகளுக்கும் ஒருகாரணம் உண்டு. தேசங்களில் சம்பவிக்கிறவற்றிற்கும் காரணங்கள் உண்டு. காரணம் இல்லாதபடிக்கு கர்த்தர் ஒன்றையும் செய்வதில்லை. அனேக வேளைகளில் அதை நாம் அறிவதில்லை. ஆகையால் தான் எதுவரைக்கும் ஆண்டவரே என்று கேள்விகள் கேட்கிறோம்.

ஆண்டவருடைய பதில்களை அறிந்தபின்பு,அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும்,வயல்கள் தானியத்தை  விளைவியாமற்போனாலும்,கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும்,தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்,என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன், அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி,உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்(ஆபகூக் 3:17-19) என்று விசுவாச அறிக்கையிட்டான். கர்த்தருடைய ஜனங்கள், உங்கள் கடினமான சூழ்நிலைகளில் விசுவாசத்தை இழந்து போய்விடாதிருங்கள். தீங்குகள் சம்பவிக்கும் போது சோர்ந்து போய் விடாதிருங்கள். கர்த்தர் உங்களை மகிழப்பண்ணுகிற,களிகூரப்பண்ணுகிற நாட்கள் துரிதமாய் வருகிறது. விசுவாசத்தோடு காத்திருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org