கர்த்தர் உங்கள் மேல் உதிப்பார்( Lord will rise upon you):-

ஏசா 60:2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/IqGYxztYpIw

கடைசிக்காலத்தில் இருள் பூமியை மூடும். ஏதோ ஒரு குறிப்பிட்ட பட்டணத்தில் மாத்திரமல்ல. ஒரு குறிப்பிட்ட மாநிலம், குறிப்பிட்ட தேசத்தில் மாத்திரம் இருள் மூடாது. மாறாக இந்த பூமி முழுவதும் இருள் மூடும். கொள்ளை நோய் என்னும் இருள், பஞ்சம் என்னும் இருள், வேலையிழப்பு என்னும் இருள், பூமியதிர்ச்சி என்னும் இருள், யுத்தம் என்னும் இருள், இவைகள் பூமியெங்கும் உண்டாகும். இருள் பூமியை மூடும்.

காரிருள் ஜனங்களை மூடும். யாரும் யாரையும் காப்பாற்ற முடியாத அளவிற்கு காரிருள் மூடும். ஒருவர் மயங்கி விழுந்தால் மற்றவர் அவரை தொட கூட பயப்படும் அளவிற்கு காரிருள் ஜனங்களை மூடும். இருளின் அதிபதியாகிய சத்துரு ஜனங்களை இருளுக்குள்ளாக போடும்படியாக அதிகமாக செயல்படுவான். அடுத்து என்ன சம்பவிக்குமோ என்ற கேள்விக்குறியோடு காரிருள் ஜனங்களை மூடும்.

ஆனால், இப்படிப்பட்ட கொடிதான சூழ்நிலையிலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம். (ஏசா 60:19-20). அவருடைய நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். சூரியனும் சந்திரனும் பல கோடி நட்சத்திரங்களும் இணைந்து கொடுக்க முடியாத வெளிச்சத்தை கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார். கர்த்தரே உங்களுக்கு வெளிச்சமாக இருப்பார். உங்கள் கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். இனி நீ அழுதுகொண்டிராய் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தரே உங்கள் நம்பிக்கையாக, இயேசுவே உங்கள் பங்காக இருப்பார். நீங்கள் கொழுத்த கன்றாய் இருப்பீர்கள். மோசே கர்த்தரின் மகிமையை பார்த்தபிறகு அவனுடைய முகம் பிரகாசமாக இருந்தது. அதுபோல அவருடைய மகிமை உங்கள் மேல் காணப்படும்.

ஆகையால் பயப்படாமல் சத்தமிட்டு இப்பொழுதே அறிக்கையிடுங்கள் என்மேல் கர்த்தர் உதிப்பார். நீதியின் சூரியன் என் மேல் உதிப்பார்; உலகத்தின் இரட்சகர் என் மேலும், என் குடும்பத்தின் மேலும், என் வேலை, என் தொழில், என் ஊழியத்தின் மேலும் உதிப்பார்; அவருடைய மகிமை என்மேல் காணப்படும் என்று சத்தமிட்டு அறிக்கையிடுங்கள். நிச்சயமாக கர்த்தர் உங்கள் மேல் எப்பொழுதும் உதிப்பார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org