பரிசுத்தமுள்ள இயேசுவின் இரத்தம் உங்களுக்காக சிந்தப்பட்டது(The holy blood of Jesus was shed for you.):-

I பேதுரு 1:19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/aJB6IdTbSfc

உங்கள் ஒவ்வொருவருக்காகவும் பரிசுத்தமுள்ள இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. இவ்வுலகத்தில் யாருக்காவது இரத்தம் தேவைப்படுகிறது என்றால் அவர்கள் சரீரத்தில் இருக்கும் குறிப்பிட்ட இரத்தவகையை மாத்திரமே செலுத்தமுடியும். A+, O+, B+ என்று அநேக இரத்தத்தில் பிரிவுகள் காணப்படுகிறது. ஒரு சில இரத்த பிரிவு கிடைப்பது மிகவும் கடினம். ஆனால் இயேசுவின் இரத்தம் இவ்வுலகத்திலிருக்கும் அனைவருக்காகவும், எப்பொழுதும் எளிதில் கிடைக்கத்தக்கவண்ணம் இயேசுவால் ஊற்றி கொடுக்கப்பட்டது. ஆகையால் தான் இயேசு சொன்னார் இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது (மாற்கு 14:24). உங்களுக்காக எப்பொழுதும் ஒரு திறக்கப்பட்ட ஊற்று காணப்படுகிறது. பொதுவாக இவ்வுலக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேசிப்பது இயல்பு. ஏனென்றால் பிள்ளைகள் தன்னுடைய சொந்த இரத்தம் என்று சொல்லுவார்கள். அதுபோல தான் நீங்கள் ஒவ்வொருவரும் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள். அப்படியென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் இயேசுவுக்கு எவ்வளவு விசேஷித்தவர்கள் என்று சற்று சிந்தித்துப்பாருங்கள்.

குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்று யூதாஸ் சொன்னான். யூதாஸ் சொன்னான் இயேசுவின் இரத்தம் குற்றமற்றது. இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் என்று பிலாத்து கூறினான். இயேசுவின் இரத்தம் நன்மைகளை பேசுகிற இரத்தம் என்று வசனம் சொல்லுகிறது. அப்படிப்பட்ட இரத்தம் உங்களுக்காக சிந்தப்பட்டது. காளை, வெள்ளாட்டுக்கடாவின் இரத்தமல்ல, பரிசுத்தமுள்ள இரத்தம். எங்கே கிடைக்கும் பரிசுத்தமுள்ள இரத்தம்? இதற்கு நீங்கள் என்ன கிரயம் செலுத்த வேண்டும் ? யாரிடம் நீங்கள் போக வேண்டும்? எல்லாவற்றிக்கும் பதில் ஒன்று தான். நீங்கள் இருக்கிற இடத்தில், இயேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் என்னை கழுவும் என்று சொல்லுவீர்களென்றால், அந்த நிமிடமே உங்களை இயேசுவின் இரத்தம் சூழ்ந்துகொள்ளும். வேறெங்கும் அலையவேண்டிய தேவையில்லை. ஊர் ஊரக சுற்றி பரிசுத்த இரத்தத்திற்காக செலவு செய்ய தேவையில்லை. என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது என்று இயேசு சொன்னார். இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலமாக நமக்கு சமாதானம் கிடைத்திருக்கிறது.

இயேசுவின் பரிசுத்தமுள்ள இரத்தத்திற்காக எப்பொழுதும் நன்றியுள்ளவர்களாய் இருங்கள். உங்களுக்காக பரிசுத்த இரத்தத்தை சிந்தி, மீட்டெடுத்து, பிதாவிற்கு அருகில் கொண்டு சென்றவருக்கு வாழ்நாளெல்லாம் வாழ உங்களை அற்பணியுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org