பெருமூச்சின் ஜெபம் (Groaning prayer)

ஆதலால் மனுபுத்திரனே, உன் இடுப்பு நொறுங்கும்படி  பெருமூச்சுவிடு, அவர்கள் கண்களுக்கு முன்பாக  மனங்கசந்து பெருமூச்சுவிடு (எசே. 21:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oZU1eB7axUM

ஜெபங்கள் பலவகைப் படுகிறது, விண்ணப்ப ஜெபம், பரிந்து பேசுகிற ஜெபம், திறப்பிலே நிற்கிற ஜெபம், கண்ணீரின் ஜெபம் என்று அனேக விதமான ஜெபங்களைப் பற்றிக் கூறலாம். எசேக்கியேலைப் பார்த்து ஆண்டவர் கூறுகிறார், உன் இடுப்பு நொறுங்கும்படிக்கும்,  மனங்கசந்தும்  பெருமூச்சுவிட்டும் ஜெபி என்பதாக. அதற்குக் காரணம் என்னவென்றால் இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவத்தினிமித்தம் அவர்களுக்கு விரோதமாக துர்செய்தி வருகிறது என்று ஆண்டவர் கூறினார். பாபிலோனியர்கள் யூதாவின் ஜனங்களுக்கு விரோதமாக, சுமார் 18 வருட இடைவெளியில், மூன்று முறை யுத்தத்திற்கு வந்தார்கள். முதல்முறை வந்த வேளையில் தானியேல் அவனுடைய நண்பர்கள், மற்ற யூத ஜனங்களில்  பலரைச் சிறைபிடித்துக் கொண்டு போனார்கள். எட்டுவருடங்கள் கழிந்து மீண்டும் வந்து எசேக்கியேல்  மற்றும் பலரைச் சிறை பிடித்துக் கொண்டு போனார்கள். அதிலிருந்து சுமார் பத்து வருடங்கள் கழிந்து மூன்றாவது முறை பாபிலோனியர்கள் வந்த வேளையில் எருசலேம் முழுவதும் அவர்களுடைய கையில் விழுந்தது. மூன்றாவது அழிவு வருவதற்கு முன்பு எசேக்கியேல்  கேபார் நதியண்டையில் சிறைபட்டவர்கள் நடுவில் காணப்பட்ட போது கர்த்தருடைய கரம் அவன் மேல் அமர்ந்தது, உடனே வானம் திறக்கப்பட்டு தேவ தரிசனங்களைக் கண்டான். அதைத் தொடர்ந்து அவனோடு கர்த்தர் இடைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் எருசலேமில் மீதி காணப்படுகிற ஜனங்களுக்கு துர்செய்தி வருகிறது என்று ஆண்டவர் கூறினார். ஆகையால், மனு புத்திரனே, நீ ஓலமிட்டு அலறு, பட்டயம் என் ஜனத்தின்மேல் வரும், அது இஸ்ரவேல்  பிரபுக்கள் எல்லார்மேலும் வரும், அதினிமித்தம் என் ஜனத்துக்குள்ளே திகில் உண்டாயிருக்கும்.  ஆகையால் உன் விலாவிலே அடித்துக்கொள் என்று கர்த்தர் கூறியதை எசே. 21:12ல் வாசிக்க முடிகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே, இந்த நாட்களில் எங்குத் திரும்பினாலும்  துர்செய்தி காணப்படுகிறது. அரசியல் ஸ்திரமின்மைகளும், வேலையிழப்புகளும், வாகன விபத்துகளும், ஆபத்துகளும், யுத்தங்களும், போதையினால் உண்டாகும் தீங்குகளும், குடும்பங்களில் பிரிவினைகளும்,   ஒன்றன்பின் ஒன்றாக இப்படிப்பட்ட செய்திகளே இந்நாட்களில் அதிகமாக வருகிறது. ஆகையால் பெருமூச்சு விட்டு அழுது ஜெபிக்கும் படிக்குக் கர்த்தர் உங்களை அழைக்கிறார்.  இடுப்பு நொறுங்கியும், மனங்கசந்தும் பெருமூச்சு விட்டும் ஜெபிக்கிற பாரமுள்ள ஜனங்களைக் கர்த்தருடைய கண்கள் தேடுகிறது. இந்நாட்களில் ஜெபக்குறைவு எங்கும் காணப்படுகிறது. சபைகளில்  ஜெபக்கூட்டங்கள் குறைந்தும், ஜெபக்கூட்டங்களில் விசுவாசிகளுடைய எண்ணிக்கைக் குறைந்தும் காணப்படுகிறது. விருந்து வைபவங்கள் கேளிக்கைகள் என்றால் எல்லாரும் கலந்து கொள்ளுவார்கள், ஆனால் ஜெபிக்கக் கூடிவருவதற்கு நேரமில்லை. பிசாசு ஜனங்களை  மும்மரமாகவே வைத்திருக்கிறான். ஆனால்  ஜெபிக்கிறவர்களுக்குக் கர்த்தர் நன்மைகளை வைத்திருக்கிறார். கர்த்தர் பெருமூச்சுவிட்டழுகிற  மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடும் படிக்குக் கூறினார் என்று எசே. 9:4ல் எழுதப்பட்டிருக்கிறது. அப்படி அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என்றும், அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதிருங்கள் என்றும் எசே. 9:6ல் கர்த்தர் கூறினார். நீங்கள்  மற்றவர்களுக்காகப் பெருமூச்சு விட்டு அழுது பாரத்தோடு ஜெபிக்கும் போது, கர்த்தர் உங்கள் நெற்றிகளில் அடையாளம் போட்டு உங்களை முத்தரிப்பார். ஒரு தீங்கும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அணுகுவதில்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae