உங்கள் வேலையைப் பாருங்கள் (Mind your business)

வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான் (நீதி. 26:17).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Zm9qjQtBRd8

சாலோமோன் ஞானி, தேவ ஞானத்தினால் நிறைந்து எழுதின ஆலோசனையாய் மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் என்று மத். 5:9 கூறுகிறது. உண்மையான நோக்கத்தோடும், எந்த சுய நோக்கங்களும், விருப்பு வெறுப்புகளும் இல்லாதபடி மற்றவர்களை ஒப்புரவாக்கி, அவர்களைச் சமாதானம் பண்ணுவது இயேசுவின் குணாதிசயமாய் காணப்படுகிறது, அது அவருடைய பிள்ளைகளாகிய நமக்குள்ளும் நிச்சயமாய் காணப்பட வேண்டும். அதே வேளையில், சுய நோக்குடனும், மேட்டிமையான சிந்தையுடனும், நமக்குத் தேவையில்லாத அடுத்தவர்கள் வழக்குகளில் தலையிடுவது, வழியே போகிற நாயின் காதைப் பிடித்து இழுப்பது போலானது. அவ்வாறு செய்யும் போது நாயின் கடிபட்டு வேதனைப்படுவது போல, காரணமில்லாத சமாதானக்கேடுகளையும்  ஆபத்துகளையும் விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பாகக் காணப்படுகிறது.

இயேசு ஊழியம் செய்த நாட்களில், அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர்களுக்கு அனேக ஆவிக்குரிய காரியங்களைக்  கற்றுக்கொடுக்கிறவராய்  காணப்பட்டார். அப்பொழுது அந்த ஜனக்கூட்டத்தில் ஒருவன் ஆவிக்குரிய காரியங்களில் கவனம் செலுத்தாதபடிக்கு, இயேசுவை நோக்கி, போதகரே, ஆஸ்தியைப் பாகம் பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு இயேசு: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்று கூறினார். அதிலிருந்து ஆண்டவர் தனக்குத் தேவையில்லாத காரியங்களில்   தலையிடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. யோசபாத் என்ற யூதாவின் ராஜா கர்த்தருக்கு பயந்தவன், ஆனால், கர்த்தரை வெறுக்கிற  ஆகாப் ராஜாவுக்கு உதவிசெய்யும் படிக்கு, தனக்குத்  தேவையில்லாத  ஒரு யுத்தத்திற்கு அவனோடு   கடந்து சென்றான். மிகாயா என்ற கர்த்தருடைய தீர்க்கதரிசி எச்சரித்த பின்பும் அவனோடு கூட யுத்தத்திற்குச் சென்றான். ஆகையால் சீரியர்கள் அவனை கொலை செய்ய நெருங்கினார்கள், அந்த வேளையில் யோசபாத் கர்த்தரை  நோக்கிக் கூக்குரலிட்டான், ஆகையால் கர்த்தர் அவனைத் தப்புவித்தார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுக்குத் தேவையில்லாத,  மிஞ்சின காரியங்களில் ஒரு போதும் தலையிடாதிருங்கள். கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள்  மேட்டிமையுள்ளவையுமல்ல,  பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை என்று சங். 131:1ல் தாவீது கூறியதைப்  போலத் தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள். இந்நாட்களில் ஜனங்களும், தேசத்தின் தலைவர்களும் தங்களுக்குத்  தேவையில்லா காரியங்களில் தலையிட்டு, வழியே போகிற வம்புகளை விலை கொடுத்து வாங்கி, அதினிமித்தம் சமாதானத்தை இழந்து, அவமானப்பட்டு, கலங்கிப் போய் நிற்கிறதைப் பார்க்கமுடிகிறது. நீங்கள் அவ்வாறு காணப்படாமல் இருக்கக் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் வேண்டிய கிருபையைத் தந்தருளுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae