நிலைமையிலே நிலைத்திருங்கள் (Remain in the Situtation)

1 கொரி 7:20 அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/WkUUplfENXQ

தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே (சங் 62:11) என்று வசனம் கூறுகிறது. அதுபோல 1 கொரி 7ஆம் அதிகாரத்தில் இரண்டு இடங்களில் நிலைத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 1 கொரி 7:24ல் சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன் என்று மீண்டும் கர்த்தர் சொல்லுகிறார்.

தேவனுடைய பிள்ளைகள் ஒரு காரியத்தில் நிலைத்திருக்கிற குணாதிசயம் காணப்படவேண்டும். சபையை தெரிவு செய்து, மீண்டும் மீண்டுமாக சபையை மாற்றி நிலைத்திருக்காத சுபாவம் நமக்கு காணப்படலாகாது. நிலைமாறுகிறவன் தடுமாறுகிறவன் என்றார் ஒரு ஊழியக்காரர்.

யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான் (யோவா 3:27) என்று கூறினார். பரலோகத்திலிருந்து பெற்றுக்கொண்டதில் நாம் நிலைத்திருக்க வேண்டும். தேவன் உங்களுக்கென்று என்ன வரத்தை கொடுத்திருக்கிறாரோ, எந்த தாலந்தை கொடுத்திருக்கிறாரோ, எந்த அளவு கிருபைகளை கொடுத்திருக்கிறாரோ, எந்த ஊழியத்தை கொடுத்திருக்கிறாரோ, அவற்றில் உறுதியாய் நிலைத்திருங்கள். மற்றவர்களுக்கு இந்த குறிப்பிட்ட வேலையை கொடுத்திருக்கிறார், நானும் அந்த வேலைக்கு முயற்சிக்கப்போகிறேன் என்று சொல்லி, பரலோகத்திலிருந்து உங்களுக்கென்று கொடுக்கப்பட்ட நன்மைகளை ஆசீர்வாதங்களை வியர்த்தமாக்காதிருங்கள். அதுபோல மற்றவர்கள் ஆராதனை நடத்துகிறார்கள் என்று சொல்லி, நானும் அந்த ஊழியத்தை செய்யப்போகிறேன் என்று சொல்லி, உங்கள் அழைப்பை நீங்களாகவே மாற்றத்திருங்கள். கர்த்தர் உங்களுக்கு ஆராதனை செய்யும் ஊழியத்தை கொடுத்தால், ஆராதனை செய்யும் ஊழியத்தில் நிலைத்திருங்கள்; ஜெபம் செய்யும் ஊழியத்தை கொடுத்தால், ஜெபம் செய்யும் ஊழியத்தில் நிலைத்திருங்கள். பிறர் செய்வதை செய்யவேண்டும் என்று நினைப்பது, ஆண்டவர் உங்களுக்கென்று கொடுத்த வரத்தை வீணாக்குவதற்கு சமம். நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்கள் மகன் வீணடித்தால், உங்களுக்கு கவலையிருக்குமல்லவா? அதுபோலத்தான், கர்த்தர் கொடுத்த வரங்களை வீணாக்கும்போது, ஆவியானவர் துக்கப்படுவார் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும் (ரோம 12:3). மிதமிஞ்சி ஊழியம் செய்வதும், கர்த்தருடைய அழைப்பில் நிலைத்திருக்காமல் இருப்பதற்கு சமம். தேவன் சொல்லாததை, தேவன் சொன்னார் என்று சொல்லாதிருங்கள். ஒருவருக்காக ஜெபிக்கிறேன் என்று வாக்களித்துவிட்டு, அவர்களை மறந்துபோவது மாய்மாலம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட செயலும் மிதம் மிஞ்சி செயல்படுவதற்கு சமம்.

ஆகையால் உங்களுக்கென்று கர்த்தர் கொடுத்த அழைப்பில், உங்களுக்கென்று கர்த்தர் கொடுத்த வீட்டில், உங்களுக்கென்று கர்த்தர் கொடுத்த வாகனத்தில், உங்களுக்கென்று கர்த்தர் கொடுத்த பட்டணத்தில் நிலைத்திருங்கள். உங்கள் நண்பர் பெங்களூரு பட்டணத்தில் வீடு கட்டி, அங்கே குடியேறிவிட்டார் என்பதற்காக, நீங்களும் அங்கே போக வேண்டும் என்று எண்ணாதிருங்கள். உங்களுக்கென்று கொடுக்கப்பட்டதில் நிலைத்திருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org