நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக, ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார் (உபா. 5:15).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/s2HdL0oUw3Q
ஓய்வுநாட்களை ஆசரிப்பது என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுதலையானதற்கும் ஓர் அடையாளமாய் காணப்படுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் நானூறு வருடங்கள் அடிமைகளாய் காணப்பட்டு எகிப்தியருக்கு வேலைசெய்தார்கள். அதன்பின்பு தன்னை ஆராதிக்கும் படிக்குக் கர்த்தர் அவர்களை வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும், பார்வோனுடைய கரங்களிலிருந்து விடுதலையாக்கினார். ஆகையால் அவர்கள் ஆறு நாட்களும் வேலை செய்து ஏழாம் நாள் ஓய்ந்திருந்து கர்த்தரை தொழுதுகொள்ளவேண்டும் என்பது கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த கட்டளையாகக் காணப்படுகிறது. ஓய்வு நாட்கள் என்பது யூதர்களுக்குச் சனிக்கிழமையாகவும், உலகத்தின் பல நாடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமையாகவும், மத்திய கிழக்கு நாடுகளில் வெள்ளிக்கிழமையாகவும் காணப்படுகிறது. ஒருவன் தனக்கென்று ஒருநாளை முக்கியப்படுத்திக் கொள்ளுகிறான், ஆகையால் ஆறு நாட்கள் வேலைசெய்து ஒரு நாள் நாம் கர்த்தரை சேவிப்பதற்கும், அவருடைய வார்த்தைகளை அதிகமாய் தியானிப்பதற்கும், ஒருமித்து கூடிவந்து ஐக்கியப்பட்டு கர்த்தரை ஆராதிப்பதற்கும் கட்டாயம் ஒதுக்க வேண்டும். ஓய்வுநாட்களில் ஜெப ஆலயங்களுக்குச் செல்லுவது இயேசுவின் வழக்கமாய் காணப்பட்டது, அது போல நம்முடைய வழக்கமாய் மாறவேண்டும்.
ஆண்டவர் நம்மைப் பாவம் என்னும் அடிமைத்தனத்திலிருந்தும், பார்வோன் என்ற பிசாசின் அடிமைத்தனத்திலிருந்தும், உலகம் மாமிசம் என்னும் அடிமைத்தனத்திலிருந்தும் கிருபையாய் இரட்சித்தார். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு என்று எபே. 2:8 கூறுகிறது. கர்த்தர் நம்மை விடுதலையாக்கி, இரட்சித்ததின் நோக்கம் அவரை ஆராதிக்க வேண்டும் என்பதற்காக. ஆகையால் நீங்கள் ஓய்வுநாட்களைக் கனம் பண்ணக் கற்றுக்கொள்ளுங்கள். பிதாவை எங்கும், எல்லா நேரங்களிலும் தொழுதுகொள்ளலாம், இருந்தாலும் ஓய்வுநாட்களில் சபையாகக் கூடிவந்து கர்த்தரை சேவிக்கவேண்டும் என்பது அவருடைய கட்டளையாய் காணப்படுகிறது. ஆகையால் சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நீங்களும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.
ஓய்வுநாட்களை அசட்டைச் செய்து, கர்த்தருக்கு கொடுக்க வேண்டிய கனத்தைக் கொடுக்காமல் காணப்படும் போது, நீங்கள் இன்னும் எகிப்து என்ற பாவத்தின் அடிமைத்தனத்தில் காணப்படுகிறீர்கள் என்பது வெளிப்படுகிறது. இந்நாட்களில் எஜமான்கள், பார்வோனுடைய அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளைப் போல, ஓய்வுநாட்களில் வேலைவாங்கி சிலரை அடிமைப் படுத்துகிறார்கள். சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு, அதிகாரிகளைப் பிரியப்படுத்துவதற்காக தாங்களாகவே அடிமைத்தனம் என்னும் நுகத்தடியில் பிணைக்கப்பட ஒப்புக் கொடுக்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் அப்படிப்பட்டவர்களாய் காணப்படலாகாது. நீங்கள் ஓய்வு நாட்களைக் கனம் பண்ணி கர்த்தரை ஆராதிக்கும் போது, கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பீர்கள், பூமியின் உயர்ந்த இடங்களில் உங்களை ஏறியிருக்கும் படிக்குச் செய்வார், உங்கள் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உங்களைப் போஷித்து நடத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

