மேகம்போன்ற சாட்சியாகிய சார்லி கிர்க் (Charlie Kirk, a cloud-like witness)

எபி 12:1. ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yCoeSdo8dVs

1993 வது வருடத்தில் பிறந்த சார்லி கிர்க் தன்னுடைய பதினெட்டாவது வயதிலிருந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அவர் இந்த உலகத்தில் வாழ்ந்தது வெறும் 31 ஆண்டுகள் தான். தன்னுடைய 31வது வயதில் அவர் இரத்த சாட்சியாக மரித்தார். வாழ்ந்தாலும் இயேசுவோடு தான் மரித்தாலும் இயேசுவோடு தான் என்று வாழ்ந்து காட்டியவர். சார்லி கிர்க் இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஒருமுறை சொன்னார், நான் வேதாகமத்தை நம்புகிறேன், கிறிஸ்து மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நான் நம்புகிறேன். இதுவே என் நம்பிக்கையின் அடித்தளம் என்று கூறினார். ஒருமுறை ஒருவர் ஒரு விவாதத்தில் கேட்டார், எனக்கு மரணம் நேரிட முப்பது நிமிடங்கள் மாத்திரமே இருக்குமென்றால், கடைசியாக இந்த உலகத்தில் நான் செய்யவேண்டியது என்ன என்று கேட்டார். அதற்கு சார்லி கிர்க் சொன்னார், உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடைசி முப்பது நிமிடத்தில், இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

அவர் வேதாகமத்திலிருக்கும் சத்தியங்களை தைரியமாக உரக்க சொன்னவர். தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாகவே சிருஷ்டித்தார். ஆகையால் ஆண் பெண்ணாக மாறுவதும், பெண் ஆணாக மாறுவதும் மிகவும் தவறு, அது வேதகமத்திற்கு முரண்பாடானது என்று அழுத்தமாக சார்லி கிர்க் கூறினார். அமெரிக்க தேசத்தில் எங்கு பார்த்தாலும் தேவன் ஏற்படுத்தின ஆண் பெண்ணிற்கு பதிலாக மூன்றாம் பாலினத்தை ஆதரித்து வந்தவர்களின் கூட்டம் மிகுதி. இதை தவறு என்று சார்லி கிர்க் சுட்டிக்காட்டியதால், அவர் மீது திரளான ஜனங்கள் கோபம் கொண்டார்கள். மாத்திரமல்ல, வேதாகமத்தின் அடிப்படையில் ஆண்புணர்ச்சியையும் பெண்புணர்ச்சியையும் பாவம் என்று கண்டித்தவர். இதனால் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவளிக்கும் திரளான ஜனங்கள் அவர் மீது மிகுந்த கோபம் கொண்டனர். தேவ ஜனங்களே, பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது என்று லேவி 18:22ல் ஆண்டவர் எழுதியிருக்கிறார். ஆகையால் இப்படிப்பட்ட பொல்லாத சுபாவத்திற்கு எதிர்த்துநில்லுங்கள்.

இதை கண்ட அநேக எதிராளிகளில் ஒருவன் சார்லி கிர்கை துப்பாக்கியால் சுட்டு கொன்றான். தன்னுடைய 31 வது வயதில் இயேசுவுக்காக அவர் இரத்த சாட்சியாக மரித்தார். மிகவும் குறுகிய காலமே வாழ்ந்த அவர் காலத்தை பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்ற வசனத்தை உறுதியாக பிடித்து காலத்தை சரியாக பயன்படுத்தினார். ஒரே ஒரு வாழ்க்கை, அது சீக்கிரமாய் கடந்து செல்லுகிறது. கிறிஸ்துவுக்காய் நீ செய்வது மாத்திரமே கடைசிவரை நிலைநிற்கும் என்றார் ஒரு ஊழியக்காரர். அதுபோல சார்லி கிர்க் சீக்கிரத்தில் இரத்த சாட்சியாக மரித்தாலும், அவர் இயேசுவுக்காய் நின்றது கடைசி வரைக்கும் நிற்கும் என்பதில் ஆச்சரியமில்லை. கிறிஸ்துவை நேசிப்பவனுக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தை போன்றது தான் என்றார் மற்றொரு ஊழியக்காரர். அதுபோல தான் சார்லி கிர்க் வந்த சோதனைகளை இயேசுவின் மீது வைத்த அன்பினிமித்தம் எதிர்கொண்டு, மேகம் போன்ற திரளான சாட்சிகளை போல அவர் கர்த்தருடைய இராஜ்யத்திற்குள் 10 Sep, 2025ல் பிரவேசித்தார்.

தேவஜனங்களே, சார்லி கிர்க் இரத்த சாட்சியாக மரித்தது, இயேசுவை ஏற்றுக்கொள்ளாத தேசத்திலும், சுவிசேஷத்திற்கு தடை விதித்த தேசத்திலும் அல்ல. மாறாக, உலகமே அறிந்தவண்ணம், கிறிஸ்தவ தேசம் என்றழைக்கப்படும் அமெரிக்காவில் தான் அவர் கொல்லப்பட்டார். தீர்க்கதரிசி ஒருவனும் தன்னுடைய சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று இயேசு சொன்ன வார்த்தையை நினைத்துப்பாருங்கள். இயேசுவும் சிநேகிதன் வீட்டில் தான் அடிக்கப்பட்டார். இப்படி இயேசுவுக்காக தன்னுடைய சொந்த தேசத்தில் இரத்த சாட்சியாய் மரித்த சார்லி கிர்கை போல, எந்தவொரு சவால்களையும் சந்திக்க வருங்காலங்களில் பயப்படாமல் எதிர்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org