யோவா 4:37,38 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது. நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/icA2Wyioq7I
விவசாயம் செய்கிறவர்களை பார்த்திருக்கிறீர்களா? ஒரு தோட்டத்தில் உழுகிறவர்கள் இருப்பார்கள், விதைப்பவர்கள் இருப்பார்கள், நடுகிறவர்கள் இருப்பார்கள், நீர்பாய்ச்சுகிறவர்கள் இருப்பார்கள், களையெடுப்பவர்கள் இருப்பார்கள், அறுப்பவர்கள் இருப்பார்கள், களஞ்சியங்களில் மூட்டைகளில் சேகரிப்பவர்களும் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் வெவேறு வேலைகளை செய்தாலும், விவசாயிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அதுபோல ஒரு தொழிற்சாலையில், உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பல்வேறு துறைகளில் வேலைசெய்தாலும், ஒரே குறிக்கோளுக்காகத்தான் வேலைசெய்கிறார்கள்.
அதுபோலத்தான், ஆத்தும ஆதாய பணியிலும், நடுகிறவர்களும் வேண்டும், நீர்ப்பாய்ச்சுகிறவர்களும் வேண்டும்; கடைசியில் தேவன் அதை விளைய செய்துவிடுவார். இவர்களில் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் சமநிலையில் இருக்கிறவர்கள். விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோசப்பட வேண்டும் என்று யோவா 4:36 கூறுகிறது. விதைக்கிறவனும் அறுக்கிறவனும் சமநிலையிலிருந்தாலும் அறுப்பவருக்குத்தான் கூலி என்பதையும் இந்தவசனம் சுட்டிக்காட்டுகிறது. இன்றைக்கு பல ஆயிரக்கணக்கானோர், நூற்றுக்கணக்கானோர் இருக்கும் இடங்களில் தான் பிரசங்கம் செய்யவேண்டும் என்று ஆவல் கொண்ட ஊழியக்காரர்களினிமித்தம், One to One Evangelism என்று சொல்லக்கூடிய தனியாள் ஆத்தும ஆதாயர்கள் குறைந்துபோய்விட்டனர் என்றார் ஒரு மூத்த ஊழியக்காரர். மரங்களில் இருக்கும் பழங்களை பறிப்பதற்கு பல இயந்திரங்கள் இந்நாட்களில் வந்துவிட்டது. என்னதான் இருந்தாலும், நம் வீட்டில் வளரும் மரத்திலிருக்கும் பழத்தை, நம்முடைய கையால் பறித்து சாப்பிடும் சந்தோசத்திற்கு இணையாக இயந்திரத்தை சொல்லமுடியுமா? ஆகையால், தனித்தனியாக ஆத்துமாக்களை போய் சந்தியுங்கள். இயேசுவை அவர்களுக்கு சொல்லுங்கள். உங்களால் முடிந்தமட்டும், முழுமூச்சுடன் தேவன் கொடுத்த பிரதான கட்டளையை நிறைவேற்ற வேலைசெய்யுங்கள்.
நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான் (1 கொரி 3:6-9) என்று வசனம் கூறுகிறது. உங்கள் பலன்களை தேவன் விளையச்செய்வார். ஆகையால் விதைக்கிறவர்களாகவும், அறுகிறவர்களாகவும் செயல்படுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

