தானி 3:30. பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/z3YWjDvlNME
எருசலேமில் வேலைசெய்யும்போது உயர்த்தப்படுவதற்கும், பாபிலோனில் வேலைசெய்யும்போது உயர்த்தப்படுவதற்கும் வித்தியாசம் உண்டு. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ இஸ்ரவேலிலிருந்து பாபிலோனிற்கு கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் எருசலேமிலிருக்கும்போது உயர்த்தப்பட்டால் அது சாதாரண அற்புதம். ஆனால் பாபிலோனில் உயர்த்தப்படுவது அசாதாரணமான அற்புதம். நம்முடைய ஆண்டவர் அசாதாரணமான அற்புதங்களை செய்ய வல்லமையுள்ளவர். அவரால் செய்யக்கூடாத அதிசயமான காரியங்கள் ஒன்றுமில்லை. இந்த மூன்று வாலிபர்களும் உயர்ந்த ஸ்தானங்களில் உயர்த்தப்பட அக்கினியின் சூழ்நிலையில் கடந்து போகும் சூழ்நிலைவந்தது. அக்கினியின் பாதையில் கடந்துசென்றபோது அவர்களுக்குள்ளாக இருந்தது விசுவாசம். அவர்கள் சொன்னார்கள் நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார் என்பதாக. நம்முடைய ஆண்டவர் அவர்கள் அறிக்கையிட்ட விசுவாச வார்த்தையின்படி எரிகிற அக்கினிசூளைக்கு தப்புவித்தார். விடுவிக்காமற்போனாலும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை, அவிசுவாசமான வார்த்தையல்ல, அவர்களுடைய தைரியமான வார்த்தையாக காணப்படுகிறது. அவர்களுடைய விசுவாசத்தை ஆண்டவர் கனப்படுத்தினார். அவர்கள் மூன்று பேரையும் கர்த்தர் பாபிலோனில் உயர்த்தினார். யோசேப்பை பாருங்கள். அவன் தன் தகப்பனோடு இருந்தபோது உயர்த்தப்பட்டிருந்தால் அது சாதாரண அற்புதம். அவன் எகிப்து தேசத்தில் உயர்த்தப்பட்டது அசாதாரணமான அற்புதம். மொர்தெக்காயும் எருசலேமில் இருக்கும்போது உயர்த்தப்பட்டிருந்தால் அது சாதாரண அற்புதம். ஆனால் அவனும் பெர்சியாவில் மிகப்பெரிய பொறுப்பில் உயர்த்தப்பட்டான், அசாதாரணமான அற்புதத்தை பெற்றுக்கொண்டான். ஆமானின் ஸ்தானத்தை கர்த்தர் மொர்தெக்காய்க்கு கொடுத்தார்.
அதுபோல நீங்கள் எந்த தேசங்களில் இருந்தாலும், எப்படிப்பட்ட நபர்கள் மத்தியில் வேலைசெய்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலையில் வேலை செய்தாலும், உங்களை வேலையில் உயர்த்துவது இயேசுவுக்கு இலேசான காரியம். மனிதர்களால் முடியாதது தேவனால் கூடும். உங்கள் உயர்வுக்கு பல மனிதர்கள் முட்டுக்கட்டைகளாக காணப்படலாம், பல தந்திரங்களை செய்து உங்கள் உயர்வை தடுக்க அவர்கள் முயற்சிக்கலாம். ஆனால் கர்த்தருடைய அசாதாரணமான அற்புதம் உங்கள் வாழ்க்கையில் கிரியைசெய்யும்போது, நீங்கள் பாபிலோனில் இருந்தாலும் உயர்த்தப்படுவீர்கள். காரணம் நம்முடைய ஆண்டவர் யோசனையில் பெரியவர், அவர் செயல்களிலே வல்லவர். அவருடைய வசனம் சத்தியம். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் அவருடைய வார்த்தை ஒருநாளும் ஒழிந்துபோகாது. அவருடைய வசனத்தின்படி நீங்களும் இருக்கும் நிலையிலிருந்து உயர்த்தப்படுவீர்கள்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போன்றோருக்கு புதிய பதவிகள் கிடைத்தது. அதுவும் குறிப்பாக, பாபிலோனில் புதிய பதவி கிடைத்தது. உங்களுக்கும் புதிய பதவி கிடைக்கும்படி கர்த்தர் செய்வார். இதை கேட்டுக்கொண்டும் வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் விசுவாசித்தால், தேவனுடைய மகிமையை காண்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

