கர்த்தர் உன் பங்கு (The Lord is your portion)

கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும், ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன் (புலம்பல் 3:24).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/sbJXY9Yqvxc

ஒரு புதிய மாதத்திற்குள் பிரவேசித்திருக்கிற உங்களுக்குக் கர்த்தரே உங்கள் பங்காகக் காணப்படுவார். எரேமியா தீர்க்கதரிசி கர்த்தரே என் பங்கு என்று  என் ஆத்துமா சொல்லும் என்று அறிக்கையிடுகிறதைப் பார்க்கமுடிகிறது. சங்கீதக்காரனாகிய தாவீது கூட, கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர், என் சுதந்தரத்தைத் தேவரீர் காப்பாற்றுகிறீர், நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது, ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு என்று சங். 16:5,6ல் கூறினார். அதுபோல நீங்களும் ஆண்டவரைப் பார்த்து நீரே என் பங்கு என்று கூறுங்கள். அவர் உங்கள் பங்காகக் காணப்படும் போது அது சிறப்பானதாகவும், நேர்த்தியானதாகவும் காணப்படும். ஆண்டவர் அதை ஆசீர்வதித்து காப்பாற்றுகிறவராகவும் காணப்படுவார்.

பூமிக்குரிய நம்முடைய பங்கைப் பெற்றுக்கொள்ள அனேக வேளைகளில் நாம் ஆசைப்படுகிறோம். இளையக் குமாரன் கூட தகப்பனுடைய ஆஸ்திக்காக ஆசைப்பட்டான். அது அவனைச் சந்தோஷப்படுத்தும் என்றும் ஆசீர்வாதமாக வாழ உதவும் என்றும் அவன் கருதினான். இந்நாட்களிலும் நிலபுலன்களின் பங்கிற்காக சண்டை பண்ணி, அதற்காக நீதிமன்றம், காவல் நிலையம் என்று வாழ்நாட்கள் முழுவதும் அலைகிறவர்கள் அனேகர் காணப்படுகிறார்கள்.  சிலர் நிறுவனங்களுடைய  பங்கு வாங்கினால் மிகவும் லாபம் என்று கருதி அதனுடைய ஏற்றம் இறக்கங்களைக் கவனித்துக் கொண்டே  இருபத்துநான்கு மணிநேரமும் காணப்படுவார்கள். அது    அவர்களின் எதிர்காலத்தின் பாதுகாப்பிற்காகவும், கஷ்டமில்லாதபடி ஆசீர்வாதமாக வாழ்வதற்கும் உதவியாகக் காணப்படும் என்று கருதி அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் எரேமியா தீர்க்கன் கர்த்தரே என் பங்கு என்று கூறுகிறார். என்னுடைய எதிர்காலமும், சமூகப் பாதுகாப்பும், ஆசீர்வாதமும் கர்த்தர் என்று அவன் விசுவாசித்தான். ஆகையால் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்றும் விசுவாச அறிக்கையிட்டான். 

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் பங்கு ஆண்டவராகக் காணட்டும். ஆண்டவரே நீரே என் பங்கு, என் சுதந்திரம், என்று உங்கள் ஆத்துமாவிலிருந்து அறிக்கையிடுங்கள். அவர் உங்கள் ஆஸ்தியாக, ஐசுவரியமாகக் காணப்படும் போது நீங்கள் திருப்தியான, மன ரம்மியமான வாழ்க்கை வாழமுடியும். அவர் ஐசுவரிய சம்பன்னர், வெள்ளியும் பொன்னும் என்னுடைய என்று கூறினவர். அவர் தருகிற ஆசீர்வாதம் மட்டும் வேதனையில்லாது. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி  சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது, அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை என்று யாக். 1:17 கூறுகிறது. யேகோவாயீரே  என்ற நாமமுடையவர் உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார்.   உங்கள் நம்பிக்கை கர்த்தர் மேல் மட்டும் இருக்கும் போது, அவர் உங்கள் பங்காகக் காணப்படுவார்;, நீங்கள் வாழ்ந்து சுகித்திருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae