நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் (You will have a good succcess)

என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு, நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக, இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக, அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். (யோசுவா 1:7,8)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ySdfkMPYY5k

உங்கள் வழிகளை வாய்க்கப்பண்ணுவது நீங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோசே மரித்த பின்பு, யோசுவாவிடம் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தும் பொறுப்பைக் கர்த்தர் ஒப்படைத்தார். என்னுடைய காரியங்கள் எப்படிப்பட்டதாகக் காணப்படும் என்றும், முப்பத்தொன்று ராஜாக்களையும் ஏழு ஜாதிகளையும் மேற்கொள்ளுவது எப்படி என்று யோசுவா சிந்தித்த வேளையில், அவனுடைய வழிகளை வாய்க்கப்பண்ணுவதன் ரகசியத்தைக் கர்த்தர் அவனுக்குக் கற்றுக்கொடுத்தார். அதைக் கற்றுக்கொள்ளுவது நம்முடைய வாழ்க்கையிலும், நம்முடைய வழிகளையும் நாம் செய்கிற காரியங்களையும் வாய்க்கப்பண்ணுவதற்கு உதவியாகக் காணப்படும்.

நியாயப்பிரமாணத்தின் படி செய்யக் கவனமாயிருங்கள். பிரமாணம் என்பது முதல் ஐந்து ஆகம புஸ்தகங்களைக் குறிக்கிறது. மோசேயின் மூலமாக வந்த கர்த்தருடைய வார்த்தைகளாகக் காணப்படுகிறது. வேதவார்த்தைகளை வாசிக்கிறவர்களாகவும் கேட்கிறவர்களாகவும் மாத்திரமல்ல, அதன்படி செய்கிறவர்களாக நாம் காணப்படவேண்டும்.  இயேசுவும் இந்த வார்த்தைகளின்படி செய்கிறவர்களே புத்தியுள்ள மனுஷர்கள் என்றார். நம்முடைய வழிகள் வாய்ப்பதற்குக் கர்த்தருடைய வார்த்தையின் படி செய்ய நம்மை அர்ப்பணிக்கவேண்டும்.

கர்த்தருடைய வார்த்தைகளை விட்டு இடதுபுறம் வலதுபுறம் விலகாதிருங்கள். நம்முடைய வாழ்க்கை என்னும் ஓட்டத்தின் ஓடுதளம்  (Track) என்பது கர்த்தருடைய வார்த்தை. இந்த ஓடுதளத்தை விட்டு பாதை மாறி ஓடுவதற்கு அனேக சத்தங்கள் தொனித்துக்கொண்டு காணப்படுகிற நாட்களில், கர்த்தருடைய பிள்ளைகள் மேய்ப்பனின் குரலை அவருடைய வார்த்தையின் மூலம் கேட்டு அதன்வழியில் நடக்கும் போது உங்கள் வழிகள் வாய்க்கும்.

கர்த்தருடைய வார்த்தைகள் நம்முடைய வாயை விட்டுப் பிரியாதிருக்கவேண்டும். அதை நாம் பேசவேண்டும், வாயினால் அறிக்கையிட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இருதயம் என்னும் களஞ்சியத்தில் கர்த்தருடைய வார்த்தையென்னும் தானியம் நிறைவாயிருந்தால் தான், இருதயத்தின் நிறைவினால் வாய் பேசமுடியும். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது. ஆகையால் நீங்கள் பேசுகிற வண்ணம் உங்கள் வழிகள் ஆகும்.

கர்த்தருடைய வார்த்தைகளை இரவும் பகலும் தியானிக்கவேண்டும். தியானிப்பது என்பது அசைபோடுவதாய் காணப்படுகிறது. வாசித்த ஒரு பகுதியை, வசனத்தை மீண்டும் திரும்ப வாசித்து, அது எழுதப்பட்ட சூழ்நிலை, நாம் கற்றுக்கொண்டு கடைபிடிக்கவேண்டிய காரியங்கள், வாக்குத்தத்தம் என்பவைகளை அறிந்துகொள்ளுவதாகக் காணப்படுகிறது.  கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் நாம் தியானமாய் இருக்கும்போது நம்முடைய வழிகள் வாய்க்கும்.

இவைகளை நாம் செய்யும்போது நம்முடைய வழிகள் தானாகவே வாய்க்கும். கர்த்தர் அதைவாய்க்கச் செய்வார். நீங்கள் புத்திமான்களாகவும் காணப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org