யாக் 2:8. உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3xsndYcGvGA
சுயநலவாதிகள் யாரும் மேற்குறிப்பிட்ட இராஜரீக பிரமாணத்தை நிறைவேற்றமுடியாது. நான், என்னுடைய குடும்பம், என்னுடைய வேலை, என்னுடைய வீடு என்று தன்னை மாத்திரமே சிந்தித்துக்கொண்டு இருக்கிற விசுவாசிகளாய் நாம் காணப்படலாகாது. 2 தீமோ 3:1-5 வசனங்களில் பெரிய பாவ பட்டியல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 19 வகையான பாவங்கள் அங்கே எழுதப்பட்டிருக்கிறது. அவற்றில் முதலாவதாக வருவது, மனுஷர்கள் தற்பிரியராயும் இருக்கிறார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இன்றைக்கு புறஜாதிகளை காட்டிலும் விசுவாசிகளே அதிகம் தற்பிரியராய் வாழ்கிறார்கள் என்பது தான் உண்மை.
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள் என்று யாக் 4:3 வது வசனம் கூறுகிறது. எனக்கு, என்னுடைய வீடு என்று மாத்திரமே தற்பிரியராய் விண்ணப்பம் செய்கிறவர்கள் அநேகர். பிறரை குறித்து கொஞ்சமும் கரிசனையில்லை. பிறருடைய நலனுக்காக ஜெபிக்க தவறும் கிறிஸ்தவர்களும் இந்நாட்களில் உண்டு என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆனால் யோபுவை பாருங்கள். யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார் என்று யோபு 42:10 கூறுகிறது. யோபு தனக்காக மாத்திரம் அல்ல, தன் சிநேகிதருக்காக விண்ணப்பம் செய்தான்.
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக என்று பிலி 2:4 கூறுகிறது. இதுவே கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை. சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள் (ரோம 12:15) என்று வசனம் கூறுகிறது. மற்றவர்களுடைய வாழ்க்கையில் போராட்டங்களும், பிரச்சனைகளும் இருக்குமென்றால், அவர்களோடு அந்த போராட்டத்தில் பங்கு கொள்ளுகிறவர்களாக நாம் காணப்படவேண்டும். லாசரு மரித்தபோது, இயேசு கண்ணீர்விட்டார் என்று வசனம் கூறுகிறது. நம்முடைய நேசர் அழுகிறவர்களுடனே அழுதார் என்பதையும் முன்மாதிரியாய் எடுத்துக்கொள்ளுங்கள்.
மற்றவர்கள் மீது அன்பு கூர்ந்து, அவர்களுக்காக ஜெபித்து, அவர்களோடு அழுது, அவர்களுடைய துயரங்களில் பங்குகொள்ளுபவர்களுக்கு தேவன் ஒரு வாக்குத்தத்தை வைத்திருக்கிறார். சங் 41:1-3 வசனங்கள் கூறுகிறது, சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர். படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர் என்பதாக. இந்த வாக்குத்தத்தம் உங்கள் வாழ்க்கையில் அப்படியே நிறைவேறுவதாக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

