நீங்களும் ஆயத்தமாயிருங்கள் (You must also be Ready)

மத் 24:44. நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/LPoQBrNX-vA

பள்ளி மாணவர்கள் பரீட்சைக்கு போவதற்கு முன்பாக தங்களை ஆயத்தமாக்கிக்கொள்ளுவார்கள். நேர்முகத்தேர்விற்கு செல்லும் நபர்களும் தங்களை ஆயத்தம் செய்வார்கள். விளையாட்டுப்போட்டியில் பங்குகொள்ளும் வீரர்களும் தங்களை ஆயத்தம் செய்வார்கள். இராணுவத்தில் பணிபுரியும் இராணுவர்களும் எதிராளிகளை வீழ்த்த பல பயிற்சிகளை மேற்கொண்டு தங்களை ஆயத்தம் செய்வார்கள். ஒரு பட்டணத்திலிருந்து மற்ற பட்டணங்களுக்கு செல்லும்போது வேண்டிய உடைமைகளை ஆயத்தம் செய்வோம். அதுபோல தான், நாமெல்லாரும் ஒரு நாளில் இந்த பூமியை விட்டு இயேசுவை சந்திக்க கடந்து செல்லுவோம். அதற்கு பிரதானமாக இயேசுவை சந்திக்க நாமெல்லாரும் ஆயத்தமாக வேண்டும்.

கடந்த செப்டம்பர் 22 ,23 ,24 தேதிகளில் இயேசு சபையை எடுத்துக்கொள்ள வரப்போகிறார் என்று அநேக கள்ள தீர்க்கதரிசிகள் எழும்பி ஜனங்களை வஞ்சித்தார்கள். அதை நம்பி எல்லாவற்றையும் விற்று சென்ற ஜனங்கள் பல தேசங்களில் ஏமாற்றப்பட்டார்கள். இப்படிப்பட்ட வஞ்சனைகளுக்கு சபை தப்பித்துக்கொள்ளவேண்டும். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்(மத் 24:24) என்ற வசனத்தின்படி அநேககள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பியிருக்கிறார்கள். இயேசு திரும்ப வரப்போகும் தேதியை யாராலும் கணிக்கமுடியாது, ஆனால், நிச்சயமாக ஒருநாள் சபையை சேர்த்துக்கொள்ள அவர் வரப்போகிறார். அவர் திருடனைப்போல வருவார். அதற்குமுன்பாக, நாம் அவருடைய வருகைக்கு ஆயத்தப்பட வேண்டும்.

ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார் (லுக் 21:36) என்ற வசனத்தின்படி நம்முடைய ஆயத்தங்களில் ஒன்று எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்கவேண்டும். யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே (எபி 12:14) என்ற வசனத்தின்படி இயேசு வரும்போது அவரை தரிசிக்க வேண்டுமென்றால் நாம் நம்முடைய பரிசுத்தத்தை காத்துக்கொள்ளவேண்டும். பரிசுத்தம் என்னும் ஆயத்தம் நம்முடைய வாழ்க்கையில் கடைசிமட்டும் காணப்படவேண்டும். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் (மத் 24:14) என்ற வசனத்தின்படி, முடிவிற்கு முந்தி சம்பவிப்பது பூலோகமெங்கும் சுவிசேஷம் கடந்துசெல்லும். இராஜ்யத்தின் சுவிசேஷம் என்பதின் ஆரம்பம், மையம், முடிவு எல்லாம் இயேசு மாத்திரமே. ஆகையால் நம்முடைய வாழ்நாளின் கடைசிமட்டும் சுவிசேஷம் கடந்து செல்ல எல்லாவகையிலும் நாம் பணி செய்யவேண்டும். இப்படிப்பட்ட பிரதானமான ஆயத்தம் நமக்கு காணப்படுமென்றால், நாம் இயேசுவை சந்திப்போம், அவரோடு இருப்போம், அவரோடு யுகா யுகமாக மகிழ்ச்சியோடு பரம கானானில் வாழ்வோம். ஆகையால், இயேசு இந்த தேதியில் வரப்போகிறார் என்று கேட்டு வஞ்சிக்கப்படாமல், இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதே நம்முடைய குறிக்கோளாக காணப்படட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org