ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்கப் புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (எரேமியா 35:19).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/cHSPfFn3ogI
ரேகாபியர்கள், மோசேயின் மாமனாகிய எத்திரோவின் வம்சத்தில் தோன்றி இஸ்ரவேல் ஜனங்கள் நடுவில் நாடோடிகளாக வாசம் பண்ணினவர்கள். யோயாக்கீம் என்னும் யூதாவின் ராஜாவின் நாட்களில், கர்த்தருடைய வார்த்தை எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்டாகி, ரேகாபியருடைய வீட்டுக்குப்போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக்கொடு என்றார். உடனே எரேமியா கர்த்தருடைய வார்த்தையின்படியே ரேகாபியர்கள் வீட்டார் அனைவரையும் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றில் அழைத்துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பு திராட்சை ரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும் கிண்ணங்களையும் வைத்து குடிக்குப்படிக்குக் கூறினான். ஆனால் அவர்கள் நாங்கள் குடிப்பதில்லை என்றும், எங்கள் தகப்பனாகிய யோனதாப் நாங்கள் பரதேசிகளாய் தங்கும் இடங்களில் திராட்சைரசம் குடிக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கிறார், அவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்திருக்கிறோம் என்றும் கூறினார்கள். யோனதாப், யெகூவோடு சேர்ந்து கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டினவனும் கூட. ஆகாபும், யேசபேலும் சோந்து இஸ்ரவேலை விக்கிரகங்களால் நிறைத்திருந்த வேளையில், அவற்றையும், பாகாலின் தீர்க்கதரிசிகளையும் அழிப்பதற்கு யெகூவிற்கு துணைநின்றவன் (2 ராஜா. 10:15,16).
கர்த்தருடைய வார்த்தை எரேமியா தீர்க்கதரிசிக்கு மீண்டும் உண்டாகி, ரேகாபின் குடும்பம் தன் தகப்பனுடைய சத்தத்திற்கு கீழ்படிந்து இன்றும் காணப்படுகிறார்கள், ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களைப் பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, தங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் அவர்களிடத்தில் ஏற்கனவே அனுப்பிக் கூறியிருந்தும், அவர்கள் தங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும் போனார்கள். ஆகையால் யூதாவின் மேலும் எருசலேமின் குடிகள் மேலும் பாபிலோனியர்கள் மூலம் தீங்கை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார். கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படியாமல் போவது தான், அனேக வேளைகளில் தீங்குகளும், கஷ்டங்களும் உங்கள் வாழ்க்கையில் வருவதற்குக் காரணமாகக் காணப்படுகிறது.
ரேகாபியர்கள் தன் தகப்பன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, திராட்சை ரசம் குடித்து தங்களை அசுசிப்படுத்தாதினால், கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்து, எனக்கு முன்பாக நிற்கத்தக்கப் புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமல் போவதில்லை என்று கர்த்தர் வாக்குக் கொடுத்தார். நாமும் ஆண்டவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து, அவருடைய சத்தத்திற்குச் செவிசாய்க்கும் போது, அவருக்கு முன்பாக நிற்கிறவர்களாய் காணப்படுவோம். ஒரு நாள், இரண்டு நாட்களுக்கு மட்டும் அல்ல, வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிசாய்த்து, அவருக்காக வைராக்கியம் பாராட்டும் போது, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். நீங்களும், உங்கள் பிள்ளைகளும் எப்போதும் கர்த்தருக்கு முன்பாக நிற்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

