வெளிப்பாடுகள் (Revelations)

2 கொரி 12:1. மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9C14fWf-oQ4

ஆண்டவர் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு அநேக வெளிப்பாடுகளை கொடுத்தார். சபையை எப்படி கட்டுவது, சபையின் பக்திவிருத்தி, ஊழியக்காரர்களுக்கு, பரலோக தரிசனங்கள், சபை எடுத்துக்கொள்ளப்படுதல் போன்ற எண்ணற்ற வெளிப்பாடுகளை கர்த்தர் பவுலுக்கு கொடுத்தார். ஆவியின் அபிஷேகத்தில் நிறைந்திருக்கும்போது கர்த்தர் பல வெளிப்பாடுகளை கொடுக்கிறார். தேவனுடைய பிரசன்னத்தில் வெளிப்பாடுகளுக்காக, அவர் பேசுவதற்காக காத்திருக்கும்போது, கர்த்தர் வெளிப்பாடுகளை கொடுக்கிறார். அப்படிப்பட்ட வசன வெளிப்பாடுகள் நமக்கும் கிடைக்கும்படி ஆவியானவருடைய உதவியை நாடுகிறவர்களாய் காணப்படவேண்டும்.

பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உள்ள தேவ பிள்ளைகளுக்குத்தான் கர்த்தர் வெளிப்பாடுகளை தருவார். பேதுரு, பவுல், யோவான் போன்றோர் தேவனிடமிருந்து நேரடியாக முதலாவது வெளிப்பாடுகளை பெற்றுக்கொண்டார்கள். எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார் (1 கொரி 2:9-10) என்ற வசனத்தை கவனித்து பாருங்கள். கண் காணமுடியாதவைகள், காது கேட்கமுடியாத காரியங்களை வெளிப்படுத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே என்று இந்த வசனம் திட்டமாக கூறுகிறது. ஆகையால் ஆவியினால் நடத்தப்படாமல், மாம்சத்தால் நடத்தப்படுகிறவர்கள் கூறும் வெளிப்பாடுகள், தேவ இராஜ்யத்திற்கு அடுத்தவைகளல்ல என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இருந்தாலும் இவ்வளவு வெளிப்பாடுகளை பெற்றாலும் மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே என்று பவுல் கூறுகிறார். 2 கொரி 12:7ல் அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது என்று பவுல் கூறினார். மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்ட பவுல் மேன்மைபாராட்ட எனக்கு தகுதியில்லை என்று சொல்லுவானென்றால், நாமெல்லாரும் எம்மாத்திரம் என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்.

பரிதாபமென்னவென்றால், இன்றைய நாட்களில் பல ஊழியக்காரர்கள் ஒரு பாடலை போட்டு தங்களை மேன்மைபாராட்டுவதும், ஒரு வசனத்திற்கு விளக்கம் கிடைத்தவுடன் தாங்கள் மிக பெரிய தீர்க்கதரிசி என்றும் மேன்மைபாராட்டிக்கொள்ளுகிறவர்கள் திரளாய் பெருகிவிட்டார்கள். நாம் நம்மை மேன்மைபாராட்டவல்ல, எல்லாவற்றிலும் கர்த்தரையே உயர்த்துகிறவர்களாய் காணப்படவேண்டும். தேவனிடத்தில் ஆவியானவருடைய அபிஷேகத்திற்காய் கெஞ்சுங்கள், பின்பு அவரிடமிருந்து ஆவிக்குரிய நன்மைகளுக்கு வசன வெளிப்பாடுகளை கேளுங்கள். அந்த வெளிப்பாடுகள் உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்திற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org